Published : 29 Oct 2021 01:11 PM
Last Updated : 29 Oct 2021 01:11 PM
ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (அக். 28) இரவு அனுமதிக்கப்பட்டார். அவர் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நாள் தங்கியிருந்து பரிசோதனையை முடித்துக்கொண்டு வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மனைவி லதா ரஜினிகாந்த் இது குறித்து விளக்கியுள்ளார். அதில் அவர், "ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆண்டுக்கு ஒரு முறை அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அதன்படி முழு உடல் பரிசோதனைக்காக அனுமதியாகியுள்ள அவர், ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் தங்கியிருப்பார். பின் வீடு திரும்புவார்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரஜினியின் உடல்நலம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். அதில், "வழக்கமான பரிசோதனைக்காகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ரஜினியின் மனைவி தெரிவித்துள்ளார். மருத்துவமனை நிர்வாகத்துடன் நாங்களும் பேசினோம். நலமுடனும் அவரது உடல்நிலை சீராகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்" என்றார்.
அண்மையில், 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
விருதினைப் பெற்ற அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT