Published : 29 Oct 2021 03:10 AM
Last Updated : 29 Oct 2021 03:10 AM
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக விவசாயம் கடும் சரிவை நோக்கிச்செல்கிறது. இந்த இரு மாவட்டங்களில் 25,616 ஹெக்டேர் விவசாய நிலங்களின் பரப்பு குறைந்துள்ளது. வரும் காலங்களிலும் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2015-16-ம் ஆண்டில் 1,25,971 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பாட்டில் இருந்தன. அந்த ஆண்டில் சில ஏக்கர் விவசாய நிலங்களில் இரண்டு போகம், மூன்று போகம் பயிர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மொத்த விவசாய சாகுபடி பரப்பானது 1,89,689 ஹெக்டேராக இருந்தது. தற்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தனித் தனியாக பிரிக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது 36,766 ஹெக்டேர் விவசாய நிலங்கள் மட்டுமே உள்ளன. நெல் ரகங்கள் சொர்ணவாரி பருவத்தில் 4,421 ஹெக்டேரிலும், சம்பா பருவத்தில் 15,284 ஹெக்டேரிலும், நவரை பருவத்தில் 18,786 ஹெக்டேரிலும் விவசாயம் நடைபெறுகிறது. கரும்பு 619 ஹெக்டேர், காய்கறிகள் 1,488 ஹெக்டேர் என குறைவாகவே பயிர் செய்யப்படுகின்றன. மொத்தமாக கடந்த ஆண்டில் 36,766 ஹெக்டேர் விவசாய நிலத்தில் நெல் மூன்று போக விளைச்சலையும் சேர்த்து 48,145 ஹெக்டேர் அளவுக்கு மட்டுமே விவசாயம் நடைபெற்றுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 63,589 ஹெக்டேர் விவசாய நிலங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இதில் நெல் சொர்ணவாரி பருவத்தில் 5,140 ஹெக்டேரிலும், சம்பா பருவத்தில் 15,846 ஹெக்டேரிலும், நவரை பருவத்தில் 27,852 ஹெக்டேரிலும் விவசாயம் நடைபெறுகிறது. கரும்பு7,870 ஹெக்டேரிலும், காய்கறிகள் 9,060 ஹெக்டேரிலும் பயிர் செய்யப்படுகின்றன. மூன்று பருவ நெல், மற்ற பயிர்கள் அனைத்தும் சேர்த்துவிவசாய சாகுபடி பரப்பானது 74.600 ஹெக்டேராக உள்ளது.
விவசாய நிலம், சாகுபடி பரப்பு சரிவு
கடந்த 4 ஆண்டுகளில் 25,616 ஹெக்டேர் விவசாய நிலங்களின் பரப்பளவு இரு மாவட்டங்களிலும் சேர்த்து குறைந்துள்ளது. மொத்த பயிர் சாகுபடி பரப்பானது 66,944 ஹெக்டேர் அளவுக்கு குறைந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் த.தமிழினியன் கூறும்போது, “காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தொழிற்சாலை மயமானதால் விவசாய நிலங்கள் பறிபோயின. இடு பொருட்கள் விலை உயர்வு, 100 நாள் வேலைத் திட்டத்தால் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமை போன்றவற்றால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் சென்றுவிட்டனர்.
இங்கு விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றால் இடு பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வந்து 100 நாள் வேலைத் திட்டத்தொழிலாளர்களில் 60% பேரை விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் கூலிக்காக செலவழிக்கும் தொகையை அரசே கொடுத்ததுபோல் ஆகும். விவசாயத் தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்கும். கேரள மாநிலம் இந்தத் திட்டத்தை சரியாக பயன்படுத்துகிறது. தமிழக அரசும் இதனை பரிசீலிக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT