Published : 05 Mar 2016 10:26 AM
Last Updated : 05 Mar 2016 10:26 AM
தமிழகம் முழுவதும் வெண்டைச் செடிகளில் மஞ்சள் தேமல் நோய் (யெல்லோ மொசைக் வைரஸ்) வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தடுக்க வெண்டைச் செடிகளில் செயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க, மதுரை வேளாண் பல்கலைக்கழக கல்லூரியில் வேளாண் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் வெண்டை உற்பத்தி யில் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்து மதுரை மாவட்டம் மூன்றாவது இடத்தில் உள்ளது. வாடிப்பட்டி, அலங்காநல்லூர், தாதம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக் கோட்டை, நத்தம், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வெண்டைக்காயை அதிகமாக சாகுபடி செய்கின்றனர். அலங்கா நல்லூர் அருகே தாதம்பட்டியில் விளையும் வெண்டை பாரம்பரியமிக்கது.
நிலைத்த விலை கிடைக்கக் கூடிய பயிர். 20 நாளில் மகசூல் ஆரம்பித்து விடலாம். 40 முதல் 50 நாளில் அதிகமான காய்களை பறிக்கலாம். 90 நாளில் ஆயுள் முடிந்து விடும். வாரம்தோறும் வருவாய் கொடுத்துக்கொண்டே இருக்கும். பூச்சித் தாக்குதல் இல்லா மல் இருந்தால், ஒரு ஏக்கருக்கு லட்ச ரூபாய் கிடைக்கும்.
இந்நிலையில், தமிழகம் முழுவ தும் வெண்டைக்காய் செடிகளில் பரவும் நோயால் உற்பத்தியாகும் வெண்டை சுருண்டை விடுவதால் சந்தைகளில் வரவேற்பு இல்லாமல் கிலோ ரூ.5-க்கு விலை வீழ்ச்சி அடைந்து விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
இது குறித்து மதுரை வேளாண்மை பல்கலைக்கழக கல் லூரி பூச்சியியல் துறை தலை வர் பேராசிரியர் மா.கல்யாண சுந்தரத்திடம் கேட்டபோது அவர் கூறியது:
காய்கறிகளில் வெண்டைக்காய் அருமையான உணவு. தண்ணீரில் வெண்டைக்காயை இரண்டாக வெட்டிப்போட்டு, காலையில் எடுத்து வெறும் வயிற்றில் அந்த தண் ணீரைக் குடித்தால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம் என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட் டுள்ளது. வெண்டைக்காயில் இருக்கும் ஒட்டிப் பிடிக்கக்கூடிய பசைப் போன்ற பொருள், குழந் தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
தற்போது வெண்டைச் செடி களில் மஞ்சள் தேமல் நோய் (யெல்லோ மொசைக் வைரஸ்) பரவி வருகிறது. இந்நோய் தாக் கிய வெண்டையில் திட்டுதிட்டாக மஞ்சள், பச்சை படிந்து வெண் டைக்காய் சுருண்டு, நொடிந்து காணப்படும்.
மனிதர்களை கடித்து மலேரி யாவை பரப்பும் கொசுக்களை போல, இந்த வைரஸ் நோய் கிருமிகளை வெள்ளை ஈ என்கிற ஒருவகை பூச்சி, நோய் பாதிப்புள்ள செடிகளின் சாரை உறிஞ்சி ஆரோக்கியமான செடிகளில் பரப்புகிறது.
களை சார்பு பயிர்கள், இந்த வெள்ளை ஈக்கள் பெருக உதவி செய்கிறது. அதனால், களை கட்டுப்பாடு முக்கியம். வெண்டைச் செடிகளுக்குள் வைரஸ் உள்ளே புகுந்துவிட்டால் பூக்கள் பூக்காது. பூ பூத்தாலும் காய்கள் வராது. காய்கள் இருந்தால் அவை வளர்ச்சி அடையாது வளைந்து நொடிந்து விடுவதால் நுகர்வோர் விரும்பமாட்டார்கள்.
இந்த நோய் பாதிப்பால் வெண்டைக் காய்களை சாப்பிடும் மனிதர்கள், கால்நடைகள், தேனீக் களுக்கு எந்த கெடுதலும் இல்லை. இந்நோயைத் தடுக்க, வெண்டைச் செடிகளில் செயற்கை முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க மதுரை வேளாண் பல்கலைக்கழகக் கல்லூரியில் வேளாண் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக காட்டு வெண்டைகளை கொண்டுவந்து, வீரிய ரக வெண்டைகளை ஒட்டுக் கட்டி காட்டு வெண்டையில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள திசுக்கள், சத்துக்கள் வீரிய ரக வெண் டைக்குச் செல்ல வைக்கிறோம். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள வெண்டைச் செடிகளை உருவாக்கும் ஆராய்ச்சி நடைபெறுகிறது என்றார்.
இந்நோயை கட்டுப்படுத்துவது எப்படி? மா.கல்யாண சுந்தரம் மேலும் கூறியதாவது: வெண்டைகளுக்கு இடையேயும், வரப்பு ஓரங்களிலும், வெங்காயம், கொத்தமல்லி, மணத்தக்காளி போன்ற மணக்கும் ஊடுபயிர்களை நடலாம். மஞ்சள் காகிதத்தில் ஒட்டக்கூடிய திரவத்தைக் கலந்து ஒரு ஏக்கரில் 20 இடங்களில் வைத்தால் வைரஸ் கிருமிகளை பரப்பும் இந்த வெள்ளை ஈக்கள் அதில் ஒட்டி சாகும். இந்த வைரஸ் பூச்சிகளை, தோட்டத்துக்குள் விடாமல் தடுக்க, தோட்டத்தைச் சுற்றி மக்காச்சோளம், சோளம் பயிர் செய்ய வேண்டும். தாவர பூச்சிக்கொல்லி மருந்து, வேப்பெண்ணெய் 30 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகளில் தெளிக்க வேண்டும். இன்னும் அதிகமான பாதிப்பு இருந்தால், இமிடோ குளோபிரிட் 5 மில்லியை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் என்றார். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT