Published : 29 Oct 2021 03:13 AM
Last Updated : 29 Oct 2021 03:13 AM
தி.மலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த பன்னியூர், நெய்வாநத்தம் பகுதியில் பாறை ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.
பன்னியூர், நெய்வாநத்தம் கிராமத்தில் வரலாற்று ஆய்வு நடுவம் நிர்வாகி பாலமுருகன் தலைமையிலான குழுவினர் கண்டெடுத்துள்ளனர். அதனை பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜன் ஆய்வு செய்துள்ளார்.
பின்னர் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பன்னியூர் கிராமத்தில் உள்ள கோனைக்கல் பாறை ஒன்றில் ஓவியம் உள்ளன. வெள்ளைநிற ஓவியத்தில் பல்லக்கு, வீடு மற்றும் மனித உருவம் நின்ற நிலையில் உள்ளன. மேல் பகுதியில் இருபுறமும் மூங்கில் போன்ற கம்புகளில் பூக்களைக் கொண்டு அலங்காரம் செய்துள்ளது போல் உள்ளன. பின்புறம் இரண்டு பேர் தூக்கி செல்வதுபோலவும், முன்புறம் ஒரு உருவம் மற்றும் அதற்கு முன்னால் நாய் உருவமும் இடம் பெறுகிறது. இது, இனக்குழு தலைவனின் உயிரிழப்புக்கு பிறகு நடக்கும் நிகழ்வாக கூட இருக்கலாம்.
பாறையின் வலது புறத்தில் உள்ள ஓவியம், நெஞ்சாந்து நிறத்தில் இரண்டு வட்ட வடிவில் உருவம் உள்ளன. அதன் உள்ளே வெந்தய நிறத்தில் ஒரு உருவம் வரையப்பட்டுள்ளது. இது உள்ளுறுப்பாக இருக்கலாம். அதன் அருகே, நெஞ்சாந்து நிறத்தில் மற்றொரு ஓவியம் உள்ளன. நீண்ட விலங்கு உருவத்தின் மேற்பகுதியும், வால்போன்ற பகுதியையும் காணமுடிகிறது. அருகே ஒரு மனித உருவம் உள்ளன.
நெய்வாநத்தம் கிராமத்தில் தொப்பிதூக்கி கல் உள்ள மலைக்குன்றில் பெரிய பாறையின் அடிப்பகுதியில் வெள்ளை நிறத்தில் நான்கு உருவங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் இரண்டு உருவங்கள், மனித உருவத்தை ஒத்த வடிவத்தில் உள்ளன. தலை வட்டமாகவும், மூக்கு நீண்டும் உள்ளது. மற்றொன்று கையில் வாள் போன்ற ஆயுதம் ஏந்தி இருப்பது போலவும், மறு கை விரிந்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. தலையின் பின்புறம் வட்டம் உள்ளது. இது வழிபாட்டுக்கான உருவமாகவும் இருக்கலாம்.
மற்றொரு ஓவியத்தில் இடது கையில் வில் போன்ற ஆயுதமும், வலது கையில் அம்பு போல ஒன்றை வைத்திருப்பது போல் உள்ளது. தலையில் வட்ட வடிவு கோடு உள்ளது. அவனது பின்புறம் விலங்கு ஒன்றின் பாதி உருவம் தெரியவருகிறது. அதன் கால்கள், மேல்புறம் இருப்பது போல் உள்ளது.
இதனை காணும்போது, வேட்டையாடிய விலங்கை முதுகில் தூக்கி செல்வது போல் உள்ளது. மேலும், படகு போன்ற ஒரு ஓவியமும், மற்றொன்றில் மனித உருவமும் நாய் உருவமும் வெண்சாந்து நிற ஓவியமாக உள்ளது. வெண்சாந்து நிற ஓவியங்களாக பெருங்கற்காலத்தையும், செஞ்சாந்து நிற ஓவியங்கள் புதிய கற்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம், பாறை ஓவியங்களை பாதுகாத்து ஆவணப்படுத்த தொல்லியல் துறை முன்வர வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT