Published : 28 Oct 2021 08:44 PM
Last Updated : 28 Oct 2021 08:44 PM

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக ந.கௌதமன் நியமனம்: முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக ந.கௌதமனை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் 1974 ஆம் ஆண்டு கருணாந்தியால் மீனவர்களின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்டு, இயங்கி வருகிறது.

இக்கழகம் சாத்தனூர், பவானிசாகர், ஆழியார், அமராவதி, திருமூர்த்தி மற்றும் உப்பார் நீர்த்தேக்கங்களில் மீன்வள மேலாண்மையையும், மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நடமாடும் கடல் மீன் உணவகங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட மீன் உணவு தயாரிப்புகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்காக சென்னை ராயபுரத்தில் பயிற்சி மைய வசதி, சேத்துப்பட்டில் அமைந்துள்ள மீன்பிடி விளையாட்டுடன் கூடிய பசுமைப் பூங்கா பராமரிப்பு மேலாண்மை உள்ளிட்ட முக்கியப் பணிகளையும் நிர்வகித்து வருகிறது.

இக்கழகத்தின் தலைவராக ந.கௌதமனை நியமித்து மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

ந. கௌதமன், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தில் பிறந்தவர். கடந்த 25 ஆண்டுகளாக மீனவ கிராமங்களில் மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கண்டவர்.

தமிழக மீனவர்கள் பிரச்சினைகளைக் களையும் பொருட்டு, அரசு தரப்பில் அமைத்த குழுவில் இவர் இடம் பெற்று, இலங்கை சென்று அங்கு நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வு கண்டவர்.

மேலும், இவர் 2006 ஆம் ஆண்டு நாகை நகர் மன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x