Published : 28 Oct 2021 08:20 PM
Last Updated : 28 Oct 2021 08:20 PM
கோவை மாவட்டத்தில் வரும் 30-ம் தேதி முதல் வரும் நவம்பர் 21-ம் தேதி வரை, 150 இடங்களில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெறும் மக்கள் சபைக் கூட்டம் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இக்கூட்டத்துக்கு அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்து மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொள்கிறார்.
கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
''கோவை மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும், பயன்பெறும் வகையில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும், மக்களைத் தேடி மாவட்ட நிர்வாகம் என்ற முறையில் பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, உடனடியாகத் தீர்வு காணும் வகையில், ‘மக்கள் சபைக் கூட்டம்’ வரும் 30-ம் தேதி முதல் நவம்பர் 21-ம் தேதி வரை நடக்கிறது.
மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் இக்கூட்டங்கள் நடக்கின்றன. மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் தலா ஒரு இடம் என 100 இடங்களிலும், 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் 50 இடங்களிலும் என மொத்தம் 150 இடங்களில் இந்த மக்கள் சபைக் கூட்டம் நடக்கிறது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது வார்டு, பகுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, பாதாளச் சாக்கடை வசதி, பொதுக்கழிப்பிட வசதி, உதவித்தொகை, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பான குறைகள் குறித்த கோரிக்கைகள், பிற அரசுத் திட்டங்கள் தொடா்பான கோரிக்கை மனுக்களைப் பொதுமக்கள் வழங்கலாம்.
இக்கூட்டத்தில், அமைச்சருடன், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிடட் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்''.
இவ்வாறு ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT