Published : 28 Oct 2021 06:27 PM
Last Updated : 28 Oct 2021 06:27 PM

லைகா நிறுவனம் மற்றும் இயக்குநர் ஷங்கர் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண முடிவு: வழக்கு முடித்துவைப்பு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

லைகா நிறுவனம் மற்றும் இயக்குநர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை முடித்துவைத்தது.

நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் உருவான நிலையில், பணிகள் நின்றுபோனது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து லைகா சார்பில் தாக்கல் செய்யபட்ட மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (அக். 28) விசாரணைக்கு வந்தது.

அப்போது, லைகா நிறுவனம் தரப்பில் இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியின் மத்தியஸ்த நடைமுறையில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டதுடன், அந்த சமயத்தில் ஷங்கர் வேறு படம் இயக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்த போவதில்லை என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அப்போது ஷங்கர் தரப்பில் ஏற்கெனவே ஒத்துக்கொண்ட படங்களை முடிக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களைப் பதிவு செய்த நீதிபதிகள், இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x