Published : 28 Oct 2021 09:38 AM
Last Updated : 28 Oct 2021 09:38 AM

அம்மா உணவகங்களை தொடர்ந்து சிறப்பாக நடத்த நடவடிக்கை தேவை: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்

தமிழக அரசு, அம்மா உணவகங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக வேலை நாட்களில் சுழற்சி முறையை கொண்டுவருவது ஆகியவற்றில் ஈடுபடாமல் தொடர்ந்து அம்மா உணவகங்கள் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது போல சிறப்பாக செயல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

தமிழகத்தில் அம்மா உணவகங்களில் பொது மக்களுக்கு மூன்று வேளையும் உணவு வழக்கம் போல கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

அம்மா உணவகம், கடந்த கால அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. இங்கு ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு கலவை சாதங்கள், இரவில் 3 ரூபாய்க்கு சப்பாத்தி போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. இது ஏழை மக்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் 407 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வார்டுக்கு 2 வீதம் 200 வார்டுகளில் மொத்தம் 400 உணவகங்களும், 7 அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்படுகிறது.

கரோனா ஊரடங்கின் போதும் ஏழை மக்களின் பசிப்பிணியை போக்கியது அம்மா உணவகம்.

ஏழை, எளிய, சாதரண மக்கள் அன்றாடம் அம்மா உணவகங்களில் கிடைக்கும் உணவை உண்பதற்காக நாடிச்செல்வது வழக்கமாகிவிட்டது. அப்படி இருக்கும் போது அம்மா உணவகங்களுக்கு செலவு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை.

ஆனால் இந்த உணவகங்களில் சப்பாத்தி விற்பனை நிறுத்தப்பட்டதும், இரவு உணவில் மாற்றம் செய்யப்பட்டதும் குறையாக உள்ளது.

தற்போது தமிழக அரசு - நிதி நிலையை சுட்டிக்காட்டி, உணவு பொருட்களை குறைத்து வழங்குவதால், குறைந்த அளவிலேயே உணவு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக இங்கு பணியாற்றும் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அம்மா உணவகங்களில் சுழற்சி அடிப்படையில் வேலை, பணியாளர்கள் குறைப்பு என்ற ரீதியில் செயல்படுத்த முயற்சிப்பதை எதிர்த்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் இந்த உணவகங்களில் பணிபுரிந்து பலனடைந்து வருவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இந்நிலையில் ஏழை, எளிய மக்களும், அம்மா உணவகப் பணியாளர்களும் கடந்த காலங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்பட்டது போல சிறப்பாக தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

எனவே தமிழக அரசு - அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை குறைப்பது, பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக வேலை நாட்களில் சுழற்சி முறையை கொண்டுவருவது ஆகியவற்றில் ஈடுபடாமல் தொடர்ந்து அம்மா உணவகங்கள் கடந்த கால ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது போல சிறப்பாக செயல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x