Published : 28 Oct 2021 03:07 AM
Last Updated : 28 Oct 2021 03:07 AM

கிராமப்புற மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு அளிப்பதற்கான பிரச்சார ஊர்தியின் பயணம் தொடக்கம்: திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு ஏற்பாடு

பிரச்சார ஊர்தியின் பயணத்தை திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எஸ்.செல்வசுந்தரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர்

தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுக்களின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் பெயரில், இந்தியா முழுமைக்குமான சட்ட விழிப்புணர்வு முகாம் குடியரசு தலைவரால் கடந்த 2-ம் தேதி தொடங்கப்பட்டது. வரும் நவ. 14- ம் தேதி வரை நடைபெற உள்ள இந்நிகழ்வு, அனைத்து கிராம மக்களுக்கும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து, தமிழக அரசின் செய்தி விளம்பரத் துறையின் பிரச்சார வாகனம் மூலம் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட அறிவு மற்றும் சட்ட விழிப்புணர்வு பிரச்சார ஊர்தியின் பயணத்தை நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எஸ்.செல்வசுந்தரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஆர்.உமா, சக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது, மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.செல்வசுந்தரி பேசும்போது, ’’கிராமப்புற மக்கள், தங்களுடைய சட்ட பிரச்சினைகளுக்கு திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்று முறை தீர்வு மையத்தில் இயங்கும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவை அணுகி தீர்வை பெற்றுக் கொள்ளலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x