Published : 13 Jun 2014 08:56 AM
Last Updated : 13 Jun 2014 08:56 AM

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவு வெளியீடு: தமிழக மாணவ, மாணவிகள் 109 பேர் வெற்றி

ஐஏஎஸ் தேர்வில் தமிழக மாணவ, மாணவிகள் 109 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ள வி.பி.ஜெயசீலன் அகில இந்திய அளவில் 45-வது ரேங்க் பெற்றுள்ளார். பிறவியில் இருந்தே கண்பார்வை இல்லாத சென்னை மாணவி பினோ ஷெபைன், பிரெய்லி முறையில் பாடங்களை படித்து தேர்வு எழுதி சாதனை படைத்துள்ளார்.

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட மத்திய அரசு உயர் பதவிகளை நேரடியாக நிரப்பும் வகையில் மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) மூலம் ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 நிலைகளை உள்ளடக்கியது.

1,030 இடம்: 5 லட்சம் பேர்

2013-ம் ஆண்டுக்குரிய 1,030 காலியிடங்களை நிரப்ப கடந்த மே 26-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 5 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். இதில் 12,976 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். முதன்மைத் தேர்வு கடந்த டிசம்பர் முதல்வாரத்தில் நடந்தது. அதில் 3,003 பேர் தேர்ச்சி பெற்று நேர்காணலுக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 264 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நேர்முகத் தேர்வு கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 2 கட்டமாக டெல்லி யூபிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

1,122 பேர் தேர்வு

இறுதி தேர்வு முடிவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் குரூப்-1, குரூப்-பி பணிகளுக்கு மொத்தம் 1,122 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வடமாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் அகர்வால் தேசிய அளவில் முதலிடத்தையும், முனீஷ் சர்மா 2-ம் இடத்தையும் பிடித்தனர்.

அகில இந்திய அளவில் 45-வது ரேங்க் பெற்ற வி.பி.ஜெயசீலன் தமிழகத்தில் முதலிடத்தையும், 69-வது ரேங்க் பெற்ற டாக்டர் கே.பி.கார்த்திகேயன் 2-ம் இடத்தையும் பெற்றுள்ளனர். ஜெயசீலன் ஐ.ஆர்.எஸ். அதிகாரியாகவும், கார்த்திகேயன் ஐஆர்டிஎஸ் (ரயில்வே பணி) அதிகாரியாகவும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

தமிழகம் 3-ம் இடம்

சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழக மாணவர்கள் 2010-ல் 11 பேர், 2011-ல் 127 பேர், 2012-ல் 102 பேர், கடந்த ஆண்டில் 98 பேர் வெற்றி பெற்றனர். ஐஏஎஸ் பணிக்கு தேர்வு செய்யப்படுவோரின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழகம் கடந்த 5 ஆண்டுகளாக தேசிய அளவில் 3-ம் இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் உத்தரப் பிரதேசம், 2-ம் இடத்தில் ராஜஸ்தான் உள்ளன.

தமிழில் தேர்வெழுதி மாநிலத்தில் முதலிடம்

தமிழகத்தில் முதலிடம் பிடித்திருக்கும் வி.பி.ஜெயசீலன் பிஎச்டி மாணவர். தமிழ்வழியில் தேர்வெழுதி இந்த சாதனையை படைத்துள்ளார். இவரது சொந்த ஊர் கொடைக்கானல் அருகே உள்ள கெங்குவார்பட்டி என்னும் குக்கிராமம். பிஎஸ்சி (விவசாயம்) முடித்த பிறகு, தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ. முடித்தார். கடந்த ஆண்டு ஐ.ஆர்.எஸ். பணிக்கு தேர்வுசெய்யப்பட்டார். அவரது தந்தை பழனிச்சாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் எழுத்தர். தாய் பாண்டியம்மாள்.

‘‘இளம் வயதில் இருந்தே எனக்கு தமிழ் மீது ஆசை. எனது வெற்றிக்கு அப்பாதான் காரணம். நான் பெற்றுள்ள வெற்றி, தமிழ் மொழிக்கு, தாய்மொழிவழிக் கல்விக்கு கிடைத்த வெற்றி. தமிழ் மொழியால்தான் இந்த வெற்றியைப் பெற முடிந்தது’’ என்று ஜெயசீலன் கூறினார்

பார்வையற்ற மாணவி பேட்டி

தேசிய அளவில் 343-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மாணவி என்.எல்.பினோ ஷெபைன் (23). பிறவியிலேயே பார்வையற்றவர். சென்னை சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் பிளஸ் 2, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.ஏ. (ஆங்கில இலக்கியம்), லயோலாவில் எம்.ஏ. முடித்தார். முதல் முயற்சியில் வெற்றி வாய்ப்பை இழந்த பினோ, 2-வது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். பாடங்களை பிரெய்லி முறையில் படித்து தேர்வு எழுதியுள்ளார். தந்தை லூக் அந்தோணி சார்லஸ் ரயில்வே ஊழியர், தாய் மேரி பத்மஜா. இதுகுறித்து பினோ, ‘‘கடினமாக உழைத்தேன். இறைவன் அருளால் வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு பலர் உதவி செய்துள்ளனர். என்னைப்போல பார்வை இல்லாதவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பாகுபாடில்லாமல் சேவை செய்வேன்’’ என்றார். தற்போது ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x