Published : 27 Oct 2021 09:58 PM
Last Updated : 27 Oct 2021 09:58 PM
"முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இரண்டு மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் " என உறுதியளித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், அக்கடிதத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவுவதற்கு தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் கடிதத்தின் விவரம் வருமாறு:
தமிழக அரசும், தமிழக மக்களும் கேரளாவில் கடந்த 10 நாட்களாக மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கவலை கொண்டுள்ளனர். இந்தக் கடினமான காலகட்டத்தில் நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம். மக்களின் துயர் துடைக்கத் தேவையான உதவிகளைச் செய்வோம். அந்த வகையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவுவதற்கு தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். வெள்ள நிவாரணப் பொருட்களை தடையின்றி விநியோகம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பொருத்தவரை, நாங்கள் அணையின் நீர்மட்டத்தைக் கூர்ந்து கவனித்து வருகிறோம். எங்களின் அதிகாரிகளும் தொடர்ந்து கேரள அரசுடன் இது தொடர்பான தகவல் பரிமாற்றத்தில் இருக்கின்றனர்.
இன்று, அக்டோபர் 27 ஆம் தேதி காலை நிலவரப்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.60 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2300 க்யூசெக்ஸ் நீர்வரத்து உள்ளது.
நீர்வரத்தின் அடிப்படையில் வைகை அணைக்கு தொடர்ந்து அதிகபட்ச அளவிலான நீரை வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம். இன்று காலை 8 மணி முதல் வைகை அணைக்கு விநாடிக்கு 2300 க்யூசெக்ஸ் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டமானது உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அனுமதிக்கப்பட்ட அளவிலேயே உள்ளது. அதேபோல் மத்திய நீர் ஆணையத்தின் விதிகளின்படியும் உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நான் பேசியுள்ளேன். அணையில் நீர்மட்டத்தைத் தொடர்ந்து கூர்ந்து கவனிக்குமாறும், அணையில் இருந்து நீர் வெளியேற்றத்தை முறையே திட்டமிட்டு செயல்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளேன்.
அதேபோல் அணையின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்றம் தொடர்பான தகவல்களை எனக்கு முன் கூட்டியே தெரிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளேன். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சரியான தருணத்தில் மேற்கொள்ள முடியும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழக அரசானது, இருமாநில மக்களின் நலனை, பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கும் என்று மீண்டும் உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்பாக பல்வேறு வதந்திகளும் பரப்பப்பட்டு வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினின் இக்கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT