Published : 27 Oct 2021 09:06 PM
Last Updated : 27 Oct 2021 09:06 PM
கோவையில் திருமண மண்டபங்களில் விதிகளை மீறி, பட்டாசுக் கடைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
தீபாவளிப் பண்டிகை வரும் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிப் பண்டிகையையொட்டி, மாநகரப் பகுதியில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க மாநகர காவல்துறையும், மாவட்டப் பகுதியில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சார்பிலும் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. பட்டாசுக் கடைகள் அமைக்கும் இடங்கள் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் மூலம் கள ஆய்வு நடத்தி தடையின்மை சான்று அளித்த பின்னர் உரிமம் வழங்கப்படுகிறது.
விபத்து சம்பவங்களைத் தவிர்க்க, பட்டாசுக் கடைகள் அமைக்க அரசு பல கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளது. அதில், 270 சதுர அடிக்குள் கடை இருக்க வேண்டும், திருமண மண்டபங்களில் அமைக்கக்கூடாது, குறைந்தபட்சம் 30 அடி வழித்தடம் இருக்க வேண்டும், கடைகள் அமைக்கப்படும் இடத்தின் மாடியில் வீடுகள் இருக்கக்கூடாது என்பது உள்ளிட்டவை முக்கியமானவையாகும். ஆனால், இந்த விதிகளை மீறி கோவையில் பட்டாசுக் கடைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக பட்டாசு வியாபாரிகள், சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது,‘‘ திருமண மண்டபங்களில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், பட்டாசு கடைகள் அமைப்பதாக கூறி அனுமதி பெற்று, திருமண மண்டபங்களில் பட்டாசுக்கடைகள் அமைக்கப்படுகின்றன. இந்த விதிமீறலை மாவட்ட நிர்வாகத்தினரும், தீயணைப்புத்துறையினரும் கண்டுகொள்வதில்லை.
இவ்வாறு மண்டபங்களில் பட்டாசுக் கடைகள் அமைப்பதால், சிறு, குறு, நடுத்தர வியாபாரிகளுக்கு வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ அளவுக்கு பட்டாசுளை தேக்கி வைப்பதால் விபத்து ஏற்பட்டால், பாதிப்பு பெரியதாக இருக்கும். மாவட்டத்தில் ஏறத்தாழ 70-க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோல் விதிகளை மீறி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள பட்டாசுக்கடையில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டு, 5 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, பட்டாசுக் கடைகளில் விதிமீறல்கள் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், கோவையில் பட்டாசுக் கடைகளில் விதிகளை மீறுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது,’’ என்றனர்.
இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) அண்ணாதுரை கூறும்போது,‘‘ மாவட்டத்தில் உரிய விதிகளை பின்பற்றி பட்டாசுக் கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் பட்டாசுக் கடைகள் அமைக்க அனுமதிக்கப்படவில்லை. பட்டாசுக் கடைகளில் விதிகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்யப்படும். விதிகளை மீறி பட்டாசுக் கடைகள் அமைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT