Published : 27 Oct 2021 08:05 PM
Last Updated : 27 Oct 2021 08:05 PM
மிகப்பெரிய கல்விப் புரட்சிக்கு, மறுமலர்ச்சிக்கு இந்த இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது என்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தைத் தொடங்கிவைத்த முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித்துறையின் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், முதலியார்குப்பத்தில் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
''இல்லம் தேடிக் கல்வி என்பது சாதாரணத் திட்டமல்ல. எல்லாத் திட்டங்களையும் போல இதுவும் ஒரு திட்டம் என்று சொல்லிவிட முடியாது. இந்தத் திட்டம்தான் லட்சக்கணக்கான மாணவ, மாணவியருடைய வாழ்விலே ஒளியேற்றப் போகிறது. அதன் மூலமாக, நூற்றாண்டு காலத்திற்கு அறிவினுடைய வெளிச்சம் பரவ இருக்கிறது. மிகப்பெரிய கல்விப் புரட்சிக்கு, மறுமலர்ச்சிக்கு இந்த இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய விஷயங்கள் எல்லாம் இப்படி சிறுசிறு அளவில்தான் தொடங்கப்பட்டன. நூற்றாண்டு காலமாக மறுக்கப்பட்ட கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடங்கள் வழியாகக் கொண்டுசேர்த்தது ஆரம்பகால திராவிட இயக்கம்.
நீதிக்கட்சி தோன்றிய பிறகு சென்னை மாகாணத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார்கள். அதைத் தொடர்ந்து, பெருந்தலைவர் காமராசர், எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோரால் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுச் செழுமைப்படுத்தப்பட்டது. இதுபோன்ற சிறப்பு பெறக்கூடிய திட்டம்தான் இந்த ‘இல்லம் தேடிக் கல்வி’ என்கிற திட்டமாகும்.
கரோனா என்ற பெருந்தொற்றுக் காலத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டார்கள் என்று சொன்னாலும், அதிகமாகப் பாதிக்கப்பட்டது யார் என்று கேட்டால் நம்முடைய மாணவர்கள்தான். பள்ளிக்கு வந்து கல்வி கற்று வந்த அவர்களை வீட்டுக்குள் முடக்கிவிட்டது பெருந்தொற்றுக் காலம். பள்ளிக்கூடம் என்ற பரந்த வெளியைப் பயன்படுத்த முடியாமல் வீட்டுக்குள் இருந்ததே குழந்தைகளின் மனதைப் பாதித்துவிட்டது. அது அவர்களது படிப்பை - படிக்கும் முறையை - படிப்பில் இருக்கக்கூடிய ஆர்வத்தைக் குறைத்துவிட்டது என்றே சொல்லலாம்.
இந்தப் பாதிப்பை எப்படிச் சரிசெய்வது என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சிந்தித்தார்கள். பள்ளிக்கு வந்து படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மேலும் கூடுதல் நேரத்தைப் பள்ளி நேரம் போலவே படிப்பில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த 'இல்லம் தேடிக் கல்வி'!
உங்கள் வீட்டுக்கு அருகிலேயே - இதற்காகத் தனியாக இடங்கள் தேர்வு செய்யப்படும். நாள்தோறும், ஒவ்வொரு நாளும் மாலையில் ஒரு மணி நேரமோ - இரண்டு மணி நேரமோ வசதிக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப ஆசிரியர்கள் வந்து உங்களைப் படிக்க வைப்பார்கள். உங்கள் வீட்டிற்கு அருகிலேயே இதற்காகத் தனியாக இடங்கள் தேர்வு செய்யப்படும். நாள்தோறும் மாலையில் ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ தலைமை ஆசிரியர்களின் மேற்பார்வையில் – தன்னார்வலர்களின் ஒத்துழைப்போடு இந்தத் திட்டம் தொடங்கப் போகிறது.
பள்ளியோடு எங்கள் கடமை முடிந்துவிட்டது என்று கருதாமல், வீட்டுக்கும் வந்து உங்களுக்குக் கற்றுத் தரக்கூடிய கடமையின் தொடர்ச்சிதான் 'இல்லம் தேடிக் கல்வி' என்கிற திட்டமாகும்.
எப்போதுமே ஏதாவது ஒரு நெருக்கடி ஏற்பட்டால்தான் புதிய பாதை அதன் மூலமாகத் திறக்கும். அப்படி கரோனா என்ற நெருக்கடியில் உதயமானதுதான் இந்த 'இல்லம் தேடிக் கல்வி' என்ற திட்டமாகும். தனித்துவம் கொண்ட இந்தத் திட்டம், வகுப்பறையைப் பள்ளிகளுக்கு வெளியேயும் நீட்டிக்கச் செய்யும் மகத்தான முயற்சி. இத்திட்டம் மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாக இருக்கப்போகிறது.
தமிழ்நாடு சிறந்த கல்வித்துறை அலுவலர்களைக் கொண்ட மாநிலம். நம் கல்வித் துறை வலுவான கட்டமைப்பைக் கொண்டது. முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும், வட்டாரக் கல்வி அலுவலர்களும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் அயராமல் பணியாற்றக்கூடிய வல்லமை பெற்றவர்கள்.
பெற்றோரும், ஆசிரியர்களும், அதிகாரிகளும், கற்ற இளைஞர்களும், பரந்த உள்ளம் பெற்றவர்கள். ஆகவே, நீங்களெல்லாம் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டிய திட்டம் இந்தத் திட்டமாகும். இந்தத் திட்டம் மாலை நேரத்தையும் பள்ளியாக மாற்றப் போகிறது. வீடுகளில் இருந்து படிக்கும் சூழ்நிலை இல்லாத பிள்ளைகளுக்குப் பேருதவியாக இருக்கும். ஆசிரியர்கள் தங்கள் சேவையை மனமுவந்து ஆற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் தங்கள் அறிவையும் அனுபவத்தையும் கொடையாக வழங்க விரும்பினால் அவர்களை இந்த அரசு வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறது. தன்னார்வலர்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். படித்த இளைஞர்கள் தங்களது ஓய்வு நேரத்தை இதில் பங்கெடுப்பதன் மூலமாக பயனுள்ளதாக மாற்றலாம்.
பார் போற்றும் பள்ளிக் கல்வித்துறையின் இந்தத் திட்டத்தின் வழியாக தமிழ்நாட்டை, ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடாக’ விரைவில் மாற்ற முடியும். பள்ளிக்கும் இல்லத்துக்குமான இடைவெளி குறையும். இல்லங்களும் பள்ளிகள் ஆகும். பள்ளிகளையும் இல்லங்களாக நினைத்து மாணவச் செல்வங்களே நீங்கள் பயனுற வேண்டும்''.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT