Published : 27 Oct 2021 03:20 PM
Last Updated : 27 Oct 2021 03:20 PM
காரைக்காலில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள தீபாவளி சிறப்பங்காடியை, புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ஏ.கே.சாய் ஜெ.சரவணன் குமார் இன்று (அக்.27) திறந்து வைத்தார்.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில், அரசு சார் நிறுவனமான பாப்ஸ்கோ மூலம் தீபாவளி சிறப்பங்காடி திறக்கப்படுவது வழக்கம். இதில் மளிகைப் பொருட்கள், குறிப்பிட்ட துணி வகைகள், பட்டாசுகள் குறைந்த விலையில் விற்கப்படும். இது ஏழை, எளிய மக்களுக்குப் பயனளிப்பதாக இருக்கும்.
கடந்த 2018-ம் ஆண்டு பாப்ஸ்கோ மூலம் அல்லாமல் காரைக்கால் கூட்டுறவுப் பண்டக சாலை பொது ஊழியர்கள் மூலம் 4 நாட்கள் மட்டுமே செயல்படும் வகையில் திறக்கப்பட்டது. போதுமான பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்படவில்லை. 2019-ம் ஆண்டு காரைக்கால் வட்டார வளர்ச்சித் துறையில் பதிவு பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் மக்கள் அங்காடி என்ற பெயரில் திறக்கப்பட்ட நிலையில், பட்டாசுகள், துணிகள் விற்பனை செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு கரோனா பரவல் சூழலால் அங்காடி திறக்கப்படவில்லை.
இந்நிலையில் நிகழாண்டு, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையுடன் இணைந்து பாப்ஸ்கோ மூலம் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தீபாவளி சிறப்பங்காடியை, அமைச்சர் ஏ.கே.சாய் ஜெ.சரவணன் குமார் திறந்து வைத்து விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கடந்த காலங்களில் நிர்வாகத் திறமையின்மை காரணமாகத் திறக்கப்படாமல் இருந்த சிறப்பங்காடி, மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆண்டுதோறும் திறக்கப்படும். தொடக்க நாள் முதல் கடைசி நாள் வரை அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். அடுத்த ஆண்டு கூடுதல் இடங்களிலும் சிறப்பங்காடி திறக்கப்படும்'' என்று அமைச்சர் ஏ.கே.சாய் ஜெ.சரவணன் குமார் தெரிவித்தார்.
நவ.3-ம் தேதி வரை காலை 9 முதல் இரவு 9 மணி வரை செயல்படும் இந்த அங்காடியில் மளிகைப் பொருட்கள், பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன. சீனி, எண்ணெய் உள்ளிட்ட மானிய விலையிலான 10 பொருட்களை மட்டும் ரேஷன் அட்டையைக் காண்பித்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழாண்டு துணி விற்பனை இல்லை.
இந்நிகழ்வில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, எம்எல்ஏக்கள் ஏ.எம்.எச்.நாஜிம், பி.ஆர்.சிவா, எம்.நாக தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, குடிமைப்பொருள் வழங்கல் துறை துணை இயக்குநர் எஸ்.சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT