Last Updated : 16 Mar, 2016 06:08 PM

 

Published : 16 Mar 2016 06:08 PM
Last Updated : 16 Mar 2016 06:08 PM

மக்கள் நலக் கூட்டணியில் கோவில்பட்டி தொகுதிக்காக முட்டிமோதும் மூன்று கட்சிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட மக்கள் நலக்கூட்டணி கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரம் கோவில்பட்டி. தீப்பெட்டி, பட்டாசு ஆலைகள், பஞ்சாலைகள் அதிகம் இருப்பதால் தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி. இதனால் கம்யூனிஸ்ட் கோட்டை என்றே கோவில்பட்டி கூறப்படுகிறது. கடந்த கால தேர்தல் முடிவுகளும் இதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.

7 முறை கம்யூனிஸ்ட்

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி 1952 முதல் 2011 வரை 14 பொதுத்தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 7 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்றுள்ளது. அதிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.அழகர்சாமி 1967, 1971, 1977, 1980, 1989 என 5 முறை இத்தொகுதியில் வெற்றி வாகை சூடியுள்ளார். மேலும், 1996-ல் எல். அய்யலுசாமியும், 2001-ல் எஸ். ராஜேந்திரனும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கோவில்பட்டியில் வென்றுள்ளனர். அதிமுக 3 முறை இந்த தொகுதியை தன் வசமாக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி 2 முறையும், சுயேட்சைகள் 2 முறையும் வென்றுள்ளனர்.

கடும் போட்டி

தற்போது 15-வது சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கோவில்பட்டி தயாராகி வருகிறது. 4 கட்சிகளை கொண்ட மக்கள் நலக் கூட்டணியில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட மூன்று கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

7 தேர்தல்களில் வெற்றி வாகை சூடியதால் கோவில்பட்டி தொகுதி எப்படியும் தங்களுக்கே ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர். அந்த கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் எஸ். அழகுமுத்து பாண்டியன் உள்ளிட்ட சிலர் போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

மதிமுக ஆர்வம்

அதேநேரத்தில் இந்த முறை கோவில்பட்டி தொகுதியில் எப்படியும் போட்டியிடுவது என்ற உறுதியில் மதிமுக உள்ளது. தென்மாவட்டங்களில் மதிமுகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள தொகுதிகளில் கோவில்பட்டியும் ஒன்று. கடந்த 1996 தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ். ராதாகிருஷ்ணன் 7,487 வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினார். அவருக்கு மொத்தம் 31,828 வாக்குகள் கிடைத்தன. இதனைத் தவிர வைகோவின் சொந்த ஊருக்கு அருகாமையில் உள்ள தொகுதி என்பது உள்ளிட்ட பல்வேறு சாதகமான அம்சங்களை பட்டியலிடுகின்றனர் மதிமுகவினர்.

கோவில்பட்டி தொகுதியை எப்படியும் மதிமுகவுக்கு பெற்றுவிட வேண்டும் என்பதில் கட்சியின் பொது செயலாளர் வைகோவும் உறுதியாக இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

மதிமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ஜி.ரமேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ் உள்ளிட்ட சிலர் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

இதேபோல் மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கோவில்பட்டி தொகுதியை குறி வைத்து காய்களை நகர்த்தி வருகிறது.

கோவில்பட்டி தொகுதியில் தொழிலாளர்கள் மத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமே வலுவாக உள்ளது. மேலும், 2006 முதல் 2011 வரை கோவில்பட்டி நகராட்சி தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆர். மல்லிகா இருந்துள்ளார். எனவே, கோவில்பட்டி தொகுதியை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

முன்னாள் நகராட்சி தலைவர் ஆர். மல்லிகா, முன்னாள் நகர செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட சிலர் அக்கட்சி சார்பில் கோவில்பட்டியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ். அரச்சுனனும் போட்டியிட வாய்ப்புள்ளோர் பட்டியலில் இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். மொத்தத்தில் மக்கள் நலக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தவிர மற்ற 3 கட்சிகளுமே கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால், இதில் எந்த கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது தொகுதி பங்கீடு முடிந்த பிறகே தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x