Published : 27 Oct 2021 03:11 AM
Last Updated : 27 Oct 2021 03:11 AM
தீபாவளி பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் வெல்லத்தின் விலை அதிகரிக்குமா? என வெல்லம் தயாரிப்பில் ஈடுபட் டுள்ள கரும்பு விவசாயிகள் காத் திருக்கின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் நெல், வாழை, கரும்பு சாகுபடி பிரதான விவசாயப் பணியாக இருந்து வருகிறது. இதில், நெல் மற்றும் வாழை பயிரிடும் பரப்பளவு குறைந்து வரும் நிலையில், கரும்பு சாகுபடி பரப்பளவும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகளை அனுப்புவதைக் காட்டிலும் வெல்லமாக தயாரித்து வியாபாரிகளிடம் விற்பனை செய்வதை விவசாயிகள் சிலர் வழக்கமாக வைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் வெல்லம் தயாரிப்புப் பணி ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தொடங்கி ஜனவரி, பிப்ரவரி மாதம் வரை நடைபெறும். தற்போது, பண்டிகை காலம் என்பதால் பாலாறு படுகைகளில் உள்ள கே.வி.குப்பம் சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் வெட்டுவானம், கந்தனேரி, மாதனூர் உள்ளிட்ட பகுதிகளில் வெல்லம் தயாரிப்புப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
வெட்டுவானம் அடுத்துள்ள சின்னசேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணி கூறும்போது, ‘‘தற்போது 60 கிலோ வெல்லம் 450 ரூபாய் வரை உள்ளது. இது 600-ஆக இருந்தால்தான் எங்களுக்கு நல்ல லாபமாக இருக்கும். அதற்கு குறைவாக இருந்தால் வரவும், செலவும் சரியாக இருக்கும். கடந்த ஆண்டு அதிகபட்சமாக ரூ.510-க்கு விற்பனை செய்தோம்.
கரும்பு நடவு கூலி, வெட்டு கூலி, ஆலை கூலி என அதிகமாகி விட்டது. 2 வேளை சாப்பாடு போட்டு கூலியும் கொடுக்க வேண்டும். ஆண்களாக இருந்தால் 400, பெண்களாக இருந்தால் 350 ரூபாய் கொடுக்கிறோம்’’ என்றார்.
2 ஏக்கர் விவசாய நிலத்தில் கரும்பை பயிரிட்டுள்ள பால சுப்பிரமணி தினசரி 6 கொப்பரை அளவுக்கு வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். 2 ஏக்கர் கரும்பில் இருந்து 160 கொப்பரையில் இருந்து வெல்லம் தயாரிக்க முடியும். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெல்லம் தயாரித்து வேலூர் வெல்லம் மண்டிகளில் விற்று வரும் அவர் மேலும் கூறும்போது, ‘‘விநாயகர் சதுர்த்தி தொடங்கி ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை நாட்களில் வெல்லத்தின் விற்பனை அதிகமாக இருக்கும். பலகாரங்கள் அதிகளவில் தயாரிப்பார்கள் என்பதால் விலை ஏற்றமும் இந்த காலத்தில்தான் இருக்கும்.
பொங்கல் பண்டிகைக்கு வெல்லத்தின் விற்பனையும் குறைந்து விலையும் சரிந்து விடும். தீபாவளி நேரத்தில் இருக்கும் விலை ஏற்றமே எங்களுக்கு கை கொடுக்கும். கடந்த ஆண்டு 510 ரூபாய் வரை விலை கிடைத்தது. இந்த ஆண்டு அதே விலை கிடைத்தால் கூட பரவாயில்லை’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT