Published : 26 Oct 2021 08:21 PM
Last Updated : 26 Oct 2021 08:21 PM
பண்டிகை, விடுமுறை நாட்களில் வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கவனமாக இருக்க பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்துச் சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் சார்பில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள், வார இறுதி நாட்களில் தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிக அளவில் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள் மற்றும் மார்க்கெட் பகுதிகள் போன்ற இடங்களில் அரசின் கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகள், அங்காடிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றனவா எனக் கண்காணிக்க மாநகராட்சியின் சார்பில் காவல்துறையுடன் இணைந்து பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும், கோவிட் தொற்று பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபடவில்லை.
தற்பொழுது பண்டிகை விடுமுறை நாட்களில் தியாகராய நகர், புரசைவாக்கம், கோயம்பேடு, பாரிமுனை மற்றும் பாடி போன்ற வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பொதுமக்கள் அதிகம்கூட வாய்ப்புள்ளது. இதனால் கோவிட் தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளது.
எனவே, வணிக வளாகங்களில் உள்ள அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி குறைந்த அளவு எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பொதுமக்கள் வெளியில் செல்லும்பொழுது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத தனிநபர்களுக்குக் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும்.
பண்டிகை விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி மற்றும் காவல் துறையின் சார்பில் மேலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தியாகராய நகர், புரசைவாக்கம், கோயம்பேடு, பாரிமுனை மற்றும் பாடி போன்ற வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாநகராட்சி வருவாய்த் துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் மே மாதம் 2021 முதல் 25.10.2021 வரை கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத 9.882 நிறுவனங்களிடமிருந்தும் மற்றும் 97,553 தனிநபர்களிடமிருந்தும் ரூ.4,93,89,490/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
எனவே, பண்டிகை விடுமுறை நாட்களில் வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 30.10.2021 அன்று 1600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 7-வது தீவிர தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
எனவே, கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் மாநகராட்சியின் சிறப்பு முகாம்களில் பங்குபெற்று கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்''.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT