Published : 26 Oct 2021 05:28 PM
Last Updated : 26 Oct 2021 05:28 PM

திருவண்ணாமலை தேர்களில் அச்சாணிகள் திருட்டு; பஞ்ச ரதங்களுக்குப் பாதுகாப்பில்லை: பக்தர்கள் குற்றச்சாட்டு  

திருவண்ணாமலை தேரடி வீதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள முருகர் திருத்தேர் சக்கரம் அச்சாணி இல்லாமல் உள்ளது. | படம்: இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை 

திருவண்ணாமலை தேரடி வீதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள விநாயகர் மற்றும் முருகர் திருத்தேர்களில் இருந்து மூன்று அச்சாணிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நவம்பர் 7-ம் தேதி தொடங்குகிறது. பின்னர், மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் நவம்பர் 10-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், பத்து நாள் உற்சவம் ஆரம்பமாகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நவம்பர் 19-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு கடந்த மாதம் 16-ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதையடுத்து, தேரடி வீதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பஞ்ச ரதங்களைச் செப்பனிடும் பணி தொடங்கப்பட்டது. இதையொட்டி, பஞ்ச ரதங்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தகடு மற்றும் ஃபைபர் கண்ணாடித் தகடுகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டன. அதன்பிறகு, பராமரிப்புப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் விநாயகர் தேர் சக்கரங்களின் 2 அச்சாணிகள் மற்றும் முருகர் தேர் சக்கரத்தின் ஒரு அச்சாணியைக் காணவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பராமரிக்கும் பணி நடைபெறும்போது, கோயில் நிர்வாகம் கேட்டுக்கொள்வதன் பேரில், திருத்தேர்களுக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும். இந்த ஆண்டு, அதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றவில்லை எனத் தெரியவருகிறது. இதனால், விநாயகர் மற்றும் முருகர் திருத்தேர்களில் இருந்த மூன்று அச்சாணிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

கோயில் நிர்வாகம் விளக்கம்

இது தொடர்பாகக் கோயில் நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ''பராமரிப்புப் பணி நடைபெறுவதால், அச்சாணிகளைத் தச்சர்கள் கொண்டு சென்றிருக்கலாம்'' எனத் தெரிவித்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பக்தர்கள், “சில ஆண்டுகளுக்கு முன்பு திருத்தேர்களில் உள்ள மரச்சிற்பங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். மேலும், சில சிற்பங்களை அறுத்துக்கொண்டு சென்றனர். இப்போது, மூன்று அச்சாணிகள் திருடப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் பாதுகாப்பற்ற நிலையில் பஞ்ச ரதங்கள் உள்ளன” என்று குற்றம் சாட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x