Published : 26 Oct 2021 05:14 PM
Last Updated : 26 Oct 2021 05:14 PM

புதிய கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தை ஏற்காட்டிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றினால் போராட்டம்: ஈபிஎஸ் எச்சரிக்கை

சென்னை

மாநில அளவிலான புதிய கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தை ஏற்காட்டிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றினால் போராட்டம் நடத்தப்படும் என்று ஈபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழ்‌நாடு கூட்டுறவு ஒன்றியத்தின்‌ மூலம்‌, கூட்டுறவுத்‌ துறையில்‌ பணிபுரியும்‌ இளநிலை உதவியாளர்‌ முதல்‌ கூடுதல்‌ பதிவாளர்‌ நிலை வரை உள்ள அரசு அலுவலர்கள்‌, கூட்டுறவு நிறுவனங்களில்‌ பணிபுரியும்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ இதர துறை அலுவலர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும்‌ வகையில்‌, மாநில அளவிலான கூட்டுறவுப் பயிற்சி நிலையம்‌ ஒன்று அமைக்கப்படும்‌ என்று அதிமுக‌ அரசு 110 விதியின்‌ கீழ்‌ அறிவிப்பு செய்தது.

அதன்படி, மாநிலம்‌ முழுவதும்‌ பல இடங்களை ஆய்வு செய்து, சேலம்‌ மாவட்டம்‌, ஏற்காடு வட்டம்‌, மஞ்சகுட்டை ஊராட்சி, செம்மடுவு கிராமத்தில்‌ சுமார்‌ 5 ஏக்கர்‌ புறம்போக்கு நிலத்தில்‌, தமிழ்‌நாடு கூட்டுறவு ஒன்றியத்தின்‌ மூலம்‌, மாநில அளவிலான புதிய கூட்டுறவுப் பயிற்சி நிலையம்‌ ஒன்றை சுமார்‌ 61.80 கோடி ரூபாய்‌ மதிப்பில் அமைக்க 24.12.2020 அன்று கூட்டுறவுத்‌ துறை மூலம்‌ அரசாணை வெளியிடப்பட்டது.

முதற்கட்டமாக 39.60 லட்சம்‌ ரூபாய்‌ மதிப்பில்‌ அனைத்து நவீன வசதிகளுடன் ‌கூடிய பயிற்சி நிலையக்‌ கட்டிடம்‌ கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்‌நாடு பொதுப்பணித்‌ துறை மூலம்‌ தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து பயிற்சி நிலையம்‌ கட்டுவதற்கு 2020- 21ஆம்‌ ஆண்டுக்கான முதல்‌ தவணையாக 25 கோடி ரூபாய்‌ அனுமதிக்கப்பட்டு, பொதுப்பணித்‌ துறை மூலம்‌ கட்டுமானப்‌ பணிகள்‌ நடைபெற்று வந்தன.

இந்நிலையில்‌ கூட்டுறவுத்‌ துறை பதிவாளர்‌ பொதுப்பணித்‌ துறை நிர்வாகப்‌ பொறியாளருக்கு 28.7.2021 அன்று எழுதிய கடிதத்தில்‌, மறு உத்தரவு வரும்‌ வரை கட்டிடப்‌ பணிகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்‌. இக்கடிதத்தினை அடிப்படையாகக்‌ கொண்டு, பொதுப்பணித்‌ துறை சேலம்‌ நிர்வாகப்‌ பொறியாளர்‌‌, மாநிலக் கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தின்‌ கட்டிடப்‌ பணிகளுக்கான செலவினங்களுக்காக ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தக்‌ கூடாது என்றும்‌, அனைத்துவிதமான கட்டுமானப்‌ பணிகளையும்‌ மறு உத்தரவு வரும்வரை தொடரக்‌கூடாது என்றும்‌, 2.8.2021 அன்று அவருக்குக் கீழ்‌ உள்ள அதிகாரிகளுக்குக் கடிதம்‌ மூலம்‌ தெரியப்படுத்தி உள்ளார்‌.

ஏற்கெனவே அதிமுக‌ அரசால்‌ தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வரும்‌ பல மக்கள்‌ நலத்‌ திட்டங்களான, அம்மா இருசக்கர வாகனம்‌, அம்மா குடிநீர்‌ போன்றவற்றை முழுமையாக நிறுத்தியும்‌; அம்மா உணவகத்தில்‌ உணவு வகைகளையும்‌, எண்ணிக்கையையும்‌ குறைத்தும்‌; தாலிக்குத்‌ தங்கம்‌ திட்டத்தின்‌ பயனாளிகளுக்குப் புதுப்‌ புது நிபந்தனைகள்‌ விதித்தும்‌, இதுபோன்ற நலத்‌ திட்டங்கள்‌ தொடர்ந்து செயல்பட முடியாமல்‌ செய்து வருகிறது இந்த திமுக அரசு.

மேலும்‌, நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளைத் தமிழக மக்களிடம்‌ அளித்து, பின்புற வாசல்‌ வழியாக ஆட்சிப்‌ பொறுப்பேற்றிருக்கும்‌ இந்த திமுக அரசு, தற்போது அதிமுக அரசால்‌ தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக, தமிழ்‌நாட்டின்‌ கூட்டுறவு நிறுவனங்களில்‌ பணிபுரிவோர்‌ ஒரே இடத்தில்‌ உயர்தரப் பயிற்சி பெற அமைக்கப்பட்டு வரும்‌ மாநிலக் கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தை, சேலம்‌ மாவட்டம்‌ ஏற்காட்டிலிருந்து, கொடைக்கானலுக்கு மாற்றுவதற்கு முயற்சிகள்‌ மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

அதிமுக‌ அரசு ஒரு திட்டத்தை ஆரம்பிக்கும்‌போதே, அந்தத் திட்டத்தினால்‌ ஏற்படும்‌ பயன்‌ என்ன, அத்திட்டத்தைச் செயல்படுத்துவதால்‌ அந்த ஊராட்சி/ நகரம்‌ மற்றும்‌ அப்பகுதி வாழ்‌ மக்களுக்கு என்னென்ன பயன்‌ ஏற்படும்‌ என்ற எண்ணத்தின்‌ அடிப்படையில்‌, தீர ஆலோசித்துச் செயல்படும்‌.

ஏற்கெனவே ஊட்டி, கொடைக்கானல்‌ போன்ற இடங்கள்‌ சுற்றுலாத்‌ துறையில்‌ பெயா்‌ பெற்றவை. மேலும்‌ அந்த இடங்களில்‌ பயிற்சி நிலையங்கள்‌, பல்கலைக்கழகம்‌ போன்றவை‌ நடைபெற்று வருவதைக் கருத்தில்‌ கொண்டும்‌, சேலம்‌ மாவட்டத்தைச்‌ சுற்றியுள்ள ஏற்காடு, கொல்லிமலை, கல்வராயன்மலை போன்ற மலைப்‌ பகுதிகளில்‌ அதிக அளவில்‌ வசித்துவரும்‌ மலைவாழ்‌ மக்கள்‌ அதிக அளவு வருவாய்‌ ஈட்டும்‌ வகையில்‌ இந்த மாநில அளவிலான கூட்டுறவுப்‌ பயிற்சி நிலையத்தை ஏற்காட்டில்‌ ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டது.

இப்படித் திட்டமிட்டு, இப்பகுதி மலைவாழ்‌ மக்களின்‌ முன்னேற்றத்திற்காகவும்‌, சுற்றுலா வளர்ச்சிக்காகவும்‌ ஆரம்பிக்கப்பட்ட, மாநில அளவிலான இப்பயிற்சி நிலையத்தை ஏற்காட்டிலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு இந்த அரசு திட்டமிடுவதை அறிந்து, ஏற்காடு, ஆத்தூர்‌ ஆகிய தொகுதிகளைச்‌ சேர்ந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள்‌ சென்னையில்‌, தலைமைச்‌ செயலாளரிடம்‌ இப்பயிற்சி நிலையம்‌ தொடர்ந்து ஏற்காட்டிலேயே செயல்பட வேண்டும்‌ என்று நேரடியாக மனு அளித்துள்ளனர்‌. தலைமைச்‌ செயலாளர்‌‌ நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்‌.

ஆனால்‌, எதிலும்‌ அரசியல்‌ செய்யும்‌ திமுக அரசு, இதிலும்‌ அரசியல்‌ காழ்ப்புணர்ச்சியுடன்‌ கூட்டுறவுப்‌ பயிற்சி நிலையத்தின்‌ கட்டுமானப்‌ பணிகள்‌ 20 சதவீதம்‌ முடிவடைந்த நிலையில்‌, இப்பயிற்சி நிலையத்தை ஏற்காட்டில்‌ இருந்து கொடைக்கானலுக்கு மாற்ற உள்ளதை அறிந்து, இப்பகுதி மலைவாழ்‌ மக்கள்‌ மிகவும்‌ அதிருப்தியில்‌ உள்ளனர்‌. எனவே, மாநிலக் கூட்டுறவுப் பயிற்சி நிலையம்‌ தொடர்ந்து ஏற்காட்டிலேயே இருந்திட வேண்டும்‌ என்றும்‌; நிறுத்தப்பட்டிருக்கும்‌ கட்டுமானப்‌ பணிகளை உடனடியாக தொடர அனுமதி அளிக்க வேண்டும்‌ என்றும்‌ இந்த அரசை வலியுறுத்திக்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

மாநிலக் கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தை ஏற்காட்டிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்தால்‌, அதை எதிர்த்து இப்பகுதி மலைவாழ்‌ மக்கள்‌, சேலம்‌ மாவட்ட மக்கள்‌ ஆகியோருடன்‌, சேலம்‌ மாவட்ட அதிமுகவும்‌ இணைந்து மிகப்‌ பெரிய அளவில்‌ போராட்டம்‌ நடத்தும்‌ என்று, சேலம்‌ மாவட்ட மக்களின்‌ சார்பாக, இந்த திமுக அரசிற்குத் தெரிவித்துக்‌ கொள்கிறேன்''‌.

இவ்வாறு ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x