Published : 26 Oct 2021 04:38 PM
Last Updated : 26 Oct 2021 04:38 PM
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக நச்சு வாயுக்களை வெளியிட்டு வருவது, 'பூவுலகின் நண்பர்கள்' மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, அவ்வமைப்பு இன்று (அக். 26) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"பூவுலகின் நண்பர்கள் அமைப்பானது CREA மற்றும் ASAR ஆகிய அமைப்புகளுடன் இணைந்து தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்களின் அளவு மற்றும் எத்தனை அனல்மின் நிலையங்களில் நச்சு வாயுக்களின் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் Flue Gas Desulfuriser கருவி பொருத்தப்பட்டுள்ளது என்பது குறித்த ஆய்வை மேற்கொண்டது.
இந்த ஆய்வானது, 'Emission watch - Status assessment of SO2 emission and FGD installation for coal-based power plants in Tamil Nadu' எனும் பெயரில் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் OCEMS எனப்படும் தொடர் இணைய வழி மாசு கண்காணிப்பு அமைப்பிலிருந்து பெறப்பட்ட தரவுகள், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், என்.எல்.சி. இந்தியா நிறுவனம், தேசிய அனல்மின் நிறுவனம் போன்றவற்றிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் அடிப்படையில் தற்பொழுது தமிழகத்தில் இயங்கிவரும் 40 அனல்மின் நிலையங்களில் (13,160 MW) இரண்டு நிலையங்களில் (1,200MW) மட்டும்தான் ஃப்ளு கேஸ் டீசல்பரைசர் (FGD) எனும் காற்று மாசு குறைப்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இன்னும் எட்டு அனல் மின் நிலையங்களுக்கு FGD கருவிகள் வாங்குவதற்கான ஏலம் விடப்பட்டுள்ளது. அதிலும் பெரிதாக முன்னேற்றம் ஏற்படவில்லை. மேலும், 30 அனல் மின் நிலையங்கள் தாங்கள் வெளியிடும் மாசைக் குறைப்பதற்கான FGD கருவியைப் பொருத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரியவந்துள்ளது.
தமிழக அரசு மற்றும் என்.எல்.சி. நிறுவனத்தால் இயக்கப்படும் அனல் மின் நிலையங்களில் ஒரு அனல் மின் நிலையத்தில் கூட மாசு வெளியீட்டைக் குறைப்பதற்கான FGD கருவி பொருத்துவதற்கான டெண்டர் விடப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, இந்த ஆய்வை மேற்கொண்ட நபர்களுள் ஒருவரான க்ரியா அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர் சுனில் தாஹியா பேசுகையில், ''கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனல்மின் நிலையங்களுக்கான காற்று மாசு அளவுகளை நிர்ணயித்தது.
இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தக் காற்று மாசு அளவுகளைக் குறைப்பதற்கான கால அவகாசம் தொடக்கத்தில் வழங்கப்பட்டது. பின்னர் இந்தக் கால அவகாசமானது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டே வந்தது. கடந்த மார்ச் 21, 2021 அன்று சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி மாசு அளவுகளைக் குறைப்பதற்கான கால அவகாசம் 2024-2025ஆம் ஆண்டு வரையில் நீட்டிக்கப்பட்டது.
மாசு அளவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் மட்டும் ஓராண்டுக்கு 76,000 மனித உயிர்களை நம்மால் காப்பாற்றியிருக்க முடியும் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. மொத்தமாக 10 ஆண்டுகள் இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதால் அனல்மின் நிலையங்கள் தொடர்ந்து மனித சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய நச்சு வாயுக்களைத் தொடர்ந்து வெளியேற்றி வந்துள்ளது.
இந்தப் பத்தாண்டுகளில் மாசைக் குறைப்பதற்கான FGD கருவி பொருத்துவதில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்குமா என்றால் அதுவும் இல்லை. தமிழக அரசு மற்றும் என்.எல்.சி. நிறுவனத்தால் இயக்கப்படும் அனல்மின் நிலையங்களில் ஒரு அனல்மின் நிலையத்தில் கூட மாசைக் குறைப்பதற்கான FGD கருவி பொருத்துவதற்கான டெண்டர் விடப்படவில்லை என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது'' எனக் குறிப்பிட்டார்.
நெய்வேலி, சென்னை, தூத்துக்குடி, மேட்டூர் ஆகிய பகுதிகள் நாட்டிலே அதிகம் நிலக்கரி எரிக்கப்படும் பகுதிகளாக உள்ளன. இதில், நெய்வேலி மற்றும் சென்னை உலக அளவில் நிலக்கரி எரிக்கப்படும் முதல் 50 பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பகுதிகளில் செயல்படும் அனல்மின் நிலையங்களின் மாசு வெளியேற்றம் குறித்த கண்காணிப்பு குறித்தும் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் தரப்பட்டுள்ள தொடர் இணைய வழி மாசு கண்காணிப்பு அமைப்பு (OCEMS) தரவுக்கும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் (ஏப்ரல், மே, ஜூன் 2021) கிடைத்த தரவுக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் உள்ளன.
காற்று மாசைக் கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்படாத போதிலும்கூட SO2 அளவுகள் மிகவும் குறைவாகக் காட்டப்பட்டுள்ளது மாசு கட்டுப்பாடு வாரியத்திடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தெரியவந்தது.
பல அனல்மின் நிலையங்களில், மனிதர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வாயுவாக அறியப்பட்ட சல்பர் டை ஆக்சைடு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
2015 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட மாசு வெளியீடு அளவீட்டை அமல்படுத்தியிருந்தால் அனல்மின் நிலையங்கள் அவை நிறுவப்பட்ட ஆண்டு மற்றும் உற்பத்தித் திறனைப் பொறுத்து 600 mg/Nm3(milligram per normal cubic meter), 200 mg/Nm3, 100 mg/Nm3 என்கிற அளவுக்குள் சல்பர் டை ஆக்சைடு வெளியீடு இருந்திருக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமாக வெளியேற்றப்பட்ட SO2 நச்சு வாயு என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் அனுமதிக்கப்பட்ட சல்பர் டை ஆக்சைடின் வெளியேற்ற அளவானது 600 mg/Nm3 ஆகும்.
ஆனால், அந்த அலகானது இந்த ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் 1,280 mg/Nm3, மே மாதத்தில் 1,261 mg/Nm3, ஜூன் மாதத்தில் 1,165 mg/Nm3 என்கிற அளவில் சல்பர் டை ஆக்சைடை வெளியேற்றியுள்ளது. என்.எல்.சி. இரண்டாவது அனல்மின் நிலையத்தின் மூன்றாவது அலகில் அனுமதிக்கப்பட்ட சல்பர் டை ஆக்சைடின் வெளியேற்ற அளவானது 600 mg/Nm3 ஆகும்.
ஆனால், அந்த அலகானது இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 1,134 mg/Nm3, மே மாதத்தில் 1,021 mg/Nm3, ஜூன் மாதத்தில் 1,170 mg/Nm3 என்கிற அளவில் சல்பர் டை ஆக்சைடை வெளியேற்றியுள்ளது.
என்.எல்.சி. இரண்டாவது அனல்மின் நிலையத்தின் நான்காவது அலகில் அனுமதிக்கப்பட்ட சல்பர் டை ஆக்சைடின் வெளியேற்ற அளவானது 600 mg/Nm3 ஆகும். ஆனால், அந்த அலகானது இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 1,412 mg/Nm3, மே மாதத்தில் 1,275 mg/Nm3, ஜூன் மாதத்தில் 1,326 mg/Nm3 என்கிற அளவில் சல்பர் டை ஆக்சைடை வெளியேற்றியுள்ளது.
என்.எல்.சி. விரிவாக்க அனல்மின் நிலையத்தில் முதல் அலகில் அனுமதிக்கப்பட்ட சல்பர் டை ஆக்சைடின் வெளியேற்ற அளவானது 600 mg/Nm3 ஆகும். ஆனால், அந்த அலகானது இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 2,498 mg/Nm3, மே மாதத்தில் 1,380 mg/Nm3, ஜூன் மாதத்தில் 1,901 mg/Nm3 என்கிற அளவில் சல்பர் டை ஆக்சைடை வெளியேற்றியுள்ளது.
நெய்வேலி அனல்மின் நிலையத்தின் 250 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட முதல் அலகின் அனுமதிக்கப்பட்ட சல்பர் டை ஆக்சைடின் வெளியேற்ற அளவானது 600 mg/Nm3 ஆகும். ஆனால், அந்த அலகானது இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 3,078 mg/Nm3, மே மாதத்தில் 3,646 mg/Nm3, ஜூன் மாதத்தில் 1,993 mg/Nm3 என்கிற அளவில் சல்பர் டை ஆக்சைடை வெளியேற்றியுள்ளது.
தேசிய அனல்மின் நிலைய நிறுவனத்தால் இயக்கப்படும் வல்லூர் அனல்மின் நிலையத்தின் முதல் அலகில் அனுமதிக்கப்பட்ட சல்பர் டை ஆக்சைடின் வெளியேற்ற அளவானது 200 mg/Nm3 ஆகும். ஆனால், அந்த அலகானது இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 833 mg/Nm3, மே மாதத்தில் 719 mg/Nm3, ஜூன் மாதத்தில் 856 mg/Nm3 என்கிற அளவில் சல்பர் டை ஆக்சைடை வெளியேற்றியுள்ளது.
வல்லூர் அனல்மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் அனுமதிக்கப்பட்ட சல்பர் டை ஆக்சைடின் வெளியேற்ற அளவானது 200 mg/Nm3 ஆகும். ஆனால், அந்த அலகானது இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 700 mg/Nm3, மே மாதத்தில் 693 mg/Nm3, ஜூன் மாதத்தில் 856 mg/Nm3 என்கிற அளவில் சல்பர் டை ஆக்சைடை வெளியேற்றியுள்ளது.
தமிழக அரசால் இயக்கப்படும் வடசென்னை அனல்மின் நிலையத்தின் 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட முதல் அலகில் அனுமதிக்கப்பட்ட சல்பர் டை ஆக்சைடின் வெளியேற்ற அளவானது 600 mg/Nm3 ஆகும். ஆனால், அந்த அலகானது இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 811 mg/Nm3, மே மாதத்தில் 711 mg/Nm3, ஜூன் மாதத்தில் 650 mg/Nm3 என்கிற அளவில் சல்பர் டை ஆக்சைடை வெளியேற்றியுள்ளது.
வடசென்னை அனல்மின் நிலையத்தின்(stage II) 600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டாவது அலகில் அனுமதிக்கப்பட்ட சல்பர் டை ஆக்சைடின் வெளியேற்ற அளவானது 200 mg/Nm3 ஆகும். ஆனால், அந்த அலகானது இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 555 mg/Nm3, ஜூன் மாதத்தில் 785 mg/Nm3 என்கிற அளவில் சல்பர் டை ஆக்சைடை வெளியேற்றியுள்ளது.
முழுமையற்ற தரவுகள் மற்றும் குழப்பமான அளவீடுகள்
இந்த ஆய்வுக்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களுக்கும், மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களுக்கும் பல முரண்பாடுகள் இருந்தன. இதனால் அனல்மின் நிலையங்களால் வெளியேற்றப்படும் மாசு அளவு குறித்து நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகள் தரும் தரவுகள் மீது நம்பகமில்லாத் தன்மை ஏற்படுகிறது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் OCEMS அமைப்பில் அனல்மின் நிலையங்களின் மாசு வெளியேற்றம் குறித்த தரவுகள் அட்டவணை மற்றும் வரைகலை வடிவில் கிடைத்தாலும், வரலாற்றுத் தரவுகளை மொத்தமாக CSV, XLS, அல்லது PDF வடிவில் பெற முடிவதில்லை. இதனால் மாசு வெளியேற்றம் குறித்த ஆய்வு மற்றும் கண்காணிப்பைப் பொதுமக்கள் மேற்கொள்வது கடினமாக உள்ளது.
அனல்மின் நிலையங்களிலிருந்து வெளியாகும் மாசுக்கள் அளவானது சில அனல்மின் நிலையங்களுக்கு ஒரு அளவீட்டிலும் சில அனல்மின் நிலையங்களுக்கு வேறு மாதிரியான அளவீட்டிலும் வழங்கப்படுகிறது. இப்படியாக அளவீடுகளில் ஒற்றுமை இல்லாத காரணத்தால் மாசு வெளியேற்றம் குறித்த ஒப்பீடுகளை மெற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இந்த ஆய்வை மேற்கொண்ட நபர்களுள் ஒருவரும் 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்தவருமான பிரபாகரன் வீர அரசு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மாசு வெளியேறுவது குறித்துப் பேசுகையில், ''மும்பை, டெல்லி, பெங்களூருவை விட அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் காற்று மாசினால் ஏற்படும் அகால மரணங்கள் சென்னையில்தான் அதிகமாக உள்ளன.
சென்னையின் பல இடங்களில் நுண்துகளின் அளவு உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவுகளை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. இதனால், சென்னை போன்ற நகரங்களில் மக்களின் ஆயுட்காலம் 2 முதல் 5 ஆண்டுகள் வரை குறைவதாக AQLI ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
சென்னை, கடலூர், தூத்துக்குடி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் காற்று மாசைக் குறைப்பதற்கு பல்வேறு துறை சார்ந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசரத் தேவைவையாகும். காற்று மாசைக் குறைக்க நம் அரசுகள் செலவு செய்யும் நிதி மக்களின் ஆரோக்கியத்திற்கு செய்யப்படும் முதலீடு என்ற அடிப்படையில் அனல்மின் நிலையங்களில் காற்று மாசு குறைப்புக் கருவிகளைப் பொருத்துவதின் மூலமும், பழைய மற்றும் திறன் குறைந்த அனல்மின் நிலையங்களை மூடிவிட்டு பரந்துபட்ட புதுப்பிக்கதக்க ஆற்றலுக்கு மாறுவதும்தான் இதற்கான தீர்வாக அமையும்'' எனக் கூறினார்.
'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் கூறுகையில், ''புவி வெப்பமடைதலுக்கு முக்கியக் காரணம் மனிதர்களின் செயல்பாடுதான் எனவும் அனல்மின் நிலையங்கள் போன்ற புதைபடிவ எரிசக்தியைப் பயன்படுத்தியதால் வெளியான பசுமை இல்ல வாயுக்களால்தான் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தன்மை அதிகரித்துள்ளது என்பதை IPCC வெளியிட்ட பல்வேறு அறிக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.
உலகம் முழுவதும் இந்த புதைபடிவ எரிசக்தியிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறிவரும் நிலையில் நம் நாட்டில் புதிய அனல்மின் நிலையங்களைத் திறப்பதில் முனைப்பு காட்டுவது மற்றும் காலாவதியான அனல்மின் நிலையங்களை மூடாமலும், அதிக மாசு ஏற்படுத்தும் அனல்மின் நிலையங்களைக் கண்காணிப்பதில் தவறுவதும், மாசு அளவைக் குறைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதும் அழிவிற்கான பாதையில் பயணிப்பதற்குச் சமமாகும்'' எனத் தெரிவித்தார்.
இந்த அறிக்கையின் முடிவுரையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் பின்வருமாறு:
மின்னுற்பத்தி ஆதாரங்களைப் பகுத்தாய்தல் வேண்டும்.
நிலக்கரி சார்ந்த மின்னுற்பத்தி முறைகளில் மேற்கொண்டு முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
பழைய, அதிக மாசு ஏற்படுத்தும் மின்னுற்பத்தி நிலையங்கள் மூடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
ஒற்றைக் கொள்முதல் விலை ஏற்படுத்தும் சுமையைக் குறைக்கும் நோக்கில், மின் கொள்முதல் ஒப்பந்தங்களைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
முன்மொழியப்பட்ட, கட்டுமான அளவில் உள்ள அனல்மின் நிலையங்களை ஆரம்பக் கட்டத்திலேயே நிறுத்த வேண்டும்.
மாநிலத்தில் செயற்பாட்டில் உள்ள அனைத்து நிலக்கரி சார்ந்த மின்னுற்பத்தி நிலையங்களிலும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்பாட்டில் வைக்கும் தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தொடர் இணைய வழி மாசு கண்காணிப்பு முறை (OCEMS) நிறுவல், செயல்படுத்துதல் மற்றும் அளவுத்திருத்தல் அனைத்து மின்னுற்பத்தி நிலையங்களிலும் செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நிலக்கரி சார்ந்த மின் நிலையங்களின் மாசு கட்டுப்பாட்டு சாதனங்களின் செயல்பாட்டின் முன்னேற்றத்துக்காக, தொடர் இணையவழி மாசு கண்காணிப்பு முறை (OCEMS) மற்றும் நேரடி கண்காணிப்பு மூலம் சேகரிக்கப்பட்ட, பொதுவெளியில் உள்ள தகவல்களின் தரம் மற்றும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...