Published : 26 Oct 2021 03:22 PM
Last Updated : 26 Oct 2021 03:22 PM
11 புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் முழு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்படும் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, இன்று (அக். 26) சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசிக் கிடங்கில் கோவிட் மற்றும் குழந்தைகளுக்கான அட்டவணை தடுப்பூசிகளின் இருப்பு குறித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
"நாளை காலை நானும் துறையின் செயலாளரும் டெல்லிக்குச் செல்கிறோம். இந்தியாவில் தடுப்பூசிகள் போடும் பணி 100 கோடியை எட்டியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செல்கிறோம்.
தமிழக முதல்வரின் கோரிக்கையான, தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் முழு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கக் கோரி, நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். தற்போது வரை 850 மாணவர் சேர்க்கைக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,650 மாணவர்களை அனுமதிக்கலாம். மீதமுள்ள 800 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க கோரிக்கை வைக்கப்படும்.
11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை முன்பு ஆய்வு செய்த மத்திய ஆய்வுக் குழுவினர், 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சில பணித் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்று கூறியிருந்தார்கள். அந்த 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளையும் தற்போது மெய்நிகர் சரிபார்ப்பு (virtual verification) முறையில் காணொலி வாயிலாகவே பார்த்துக் குறைகள் சரி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளார்கள்.
இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதால் மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சரிடம் 10 லட்சம் கோவாக்சின் கூடுதலாக உடனடியாக வழங்க கோரிக்கை வைக்கப்படும்.
எதிர்காலத்தில் தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்குக் கிடங்குகள் தேவை. தடுப்பூசிகளை மாவட்ட வாரியாக, வட்ட வாரியாக தடுப்பூசிக் கிடங்குக்கு எடுத்துச் செல்வதற்கு வாகனங்களின் தேவையும் இருக்கிறது. இவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்த உள்ளோம்.
மேலும், தமிழகத்தில் 19 இடங்களில் மாவட்ட அரசு மருத்துவமனைகள் அமைக்க வேண்டியுள்ளது. அதற்கு ரூ.950 கோடி நிதி வேண்டும். அது குறித்தும் நாளை கோரிக்கை வைக்கப்படும். முன்கள மருத்துவப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை அடுத்த வாரம் வரும்.
கடந்த ஆட்சியில் முதல் அலையின்போது பயன்படுத்திய கோவிட் மருத்துவ உபகரணங்களைப் பத்திரப்படுத்தாமல், தயார் நிலையில் வைக்காமல் கிடப்பில் போட்டு வைத்தால்தான் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருந்தது.
அதுபோல இல்லாமல், இரண்டாவது அலையின் போது நாம் பயன்படுத்திய உபகரணங்களைத் தயார் நிலையில் பத்திரமாக வைத்துள்ளோம். 3-வது அலை என்று ஒன்று வந்தால் அதைச் சமாளிக்க அந்த உபகரணங்கள் தேவை. பண்டிகைகளைக் கொண்டாடுவதற்குத் தடை இல்லை. விதிமுறைகளைக் கட்டாயம் ஓராண்டாவது கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியுடன் பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும்".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT