Published : 26 Oct 2021 02:14 PM
Last Updated : 26 Oct 2021 02:14 PM

அக்.30-ம் தேதி 50,000 மையங்களில் 7-வது மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை

தமிழகத்தில் அக். 30 (சனிக்கிழமை) அன்று 7-வது மெகா தடுப்பூசி முகாம் 50,000 மையங்களில் நடத்தப்படும் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, இன்று (அக். 26) சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசிக் கிடங்கில் கோவிட் மற்றும் குழந்தைகளுக்கான அட்டவணை தடுப்பூசிகளின் இருப்பு குறித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

"தமிழகத்தில் காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, நிமோனியா, மூளைக்காய்ச்சல், கரோனா போன்ற 12 வகையான நோய்களைத் தடுக்க BCV, OPV Rota, Penta, IPV, Dpt நியூமோகோக்கள் கான்ஞ்சஜுகேட் போன்ற 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைககள் மற்றும் பெண்களுக்குச் சிறப்பாகச் செலுத்தப்பட்டு வருகின்றன.

எல்லா வகையான தடுப்பூசிகளும் கையிருப்பில் உள்ளன. 9.42 லட்சம் குழந்தைகள் மற்றும் 10.43 லட்சம் பெண்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டியுள்ளன. குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்குப் போடப்பட வேண்டிய தடுப்பூசிகளைச் சரிவரச் செய்ய வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 5 கோடி 68 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 44 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 6 மெகா தடுப்பூசி முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு 1 கோடி 33 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை 7-வது மெகா தடுப்பூசி முகாம் 50,000 மையங்களில் நடத்தப்படும். வார நாட்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன.

இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளவும். 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. அதில் 2 லட்சத்துக்கும் கீழானவர்கள்தான் இரண்டாவது தவணை கோவாக்சின் தடுப்பூசி போட வேண்டியுள்ளது.

கடந்த ஆட்சியில் முதல் அலையின்போது பயன்படுத்திய கோவிட் மருத்துவ உபகரணங்களைப் பத்திரப்படுத்தாமல், தயார் நிலையில் வைக்காமல் கிடப்பில் போட்டு வைத்தால்தான் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருந்தது.

அதுபோல இல்லாமல் இரண்டாவது அலையின்போது நாம் பயன்படுத்திய உபகரணங்களைத் தயார் நிலையில் பத்திரமாக வைத்துள்ளோம். 3-வது அலை என்று ஒன்று வந்தால் அதைச் சமாளிக்க அந்த உபகரணங்கள் தேவை. பண்டிகைகளைக் கொண்டாடுவதற்குத் தடை இல்லை. விதிமுறைகளைக் கட்டாயம் ஓராண்டாவது கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியுடன் பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும்".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x