Published : 26 Oct 2021 08:46 AM
Last Updated : 26 Oct 2021 08:46 AM
மாநிலத்தின் கடன் சுமையைக் குறைப்பது எப்படி எனக் கூறுங்கள் என பொருளாதார ஆலோசனைக் குழுவிடம் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக நேற்று (அக்டோபர் 25) பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். காணொலி வாயிலாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பேராசிரியர். ரகுராம் ராஜன், பேராசிரியர். எஸ்தர் டப்லோ, பேராசிரியர். ழான் த்ரேஸ், முனைவர். அரவிந்த் சுப்பிரமணியன், முனைவர் எஸ். நாராயண் மற்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
2021-22-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நீங்கள் பரிந்துரைத்த பலவும் சேர்க்கப்பட்டுள்ளன.
முதியோர் ஓய்வூதியத் திட்டத்துக்கான நிதிஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப்பட்டு, அத்திட்டத்தினை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வயது முதிர்ந்தோரும் பயன்பெறும் வகையில் இல்லந்தோறும் மருத்துவச் சேவை சென்றடைய “மக்களைத் தேடி மருத்துவம்” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.
தடுப்பூசி குறித்த தயக்கத்தை மக்களிடம் இருந்து போக்கினோம். தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடைய மக்களில் 72 விழுக்காட்டினருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த நிலையை ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய முன்னேற்றமாகும்.
இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புக் குறித்து நீங்கள் வழங்கிய கருத்துகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “இல்லம் தேடிக் கல்வி” என்ற திட்டம் பள்ளிக் கல்வித் துறையால் வகுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு, பள்ளி நேரத்திற்குப் பிறகும் பள்ளி வளாகங்களுக்கு வெளியேயும் இழந்த கல்வியை ஈடுசெய்வதற்கான கல்வி வழங்கப்படும். இத்திட்டத்தினை முறைப்படி தொடங்கி வைக்கிறேன்.
புள்ளிவிவரங்களின் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும் என்பதை நீங்கள் இன்னொரு முக்கிய முன்னெடுப்பாக சுட்டிக்காட்டினீர்கள். இதுதொடர்பான முக்கிய அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டுள்ளோம்.
இதற்கு ஒரு எடுத்துக்காட்டுச் சொல்ல வேண்டுமானால் நகைக்கடன்கள் ரத்து என்ற முடிவாகும். தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு குறைவாக வைத்து கடன் வாங்கியவர்களது கடன் ரத்து செய்யப்படும் என்று சொல்லி இருந்தோம். ஆனால் இதில் கடந்த ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை அறிந்தோம். அப்போதுதான் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுத்தோம்.
அந்தப் பயனை பெறுவதற்கான தகுதி வாய்ந்தவர்களைக் கவனமுடன் கண்டறிந்து அது நடைமுறைப்படுத்தப்படும் என்று முடிவெடுத்தோம். இந்த அணுகுமுறையின் மூலம் இத்திட்டத்திற்காக முதலில் உத்தேசிக்கப்பட்ட தொகையில் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது. மற்ற முன்னெடுப்புகளிலும் அதேபோலான தரவு அடிப்படையிலான அணுகுமுறை மேற்கொள்ளப்படும்.
“பயனுள்ள முடிவினை எடுக்க தரவினை பயன்படுத்துதல்” என்ற மிக முக்கியமான ஆலோசனையை பேராசிரியர் எஸ்தர் டப்லோ அவர்கள் சொன்னார்கள். இதனை மனப்பூர்வமாக நான் வரவேற்கிறேன்.
“தரவு அடிப்படையிலான முடிவெடுக்கும் ஆதார அமைப்பு” குறித்து ஏற்கனவே அரசு விரிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களுக்கு உதவ, திட்டமிட, செயல்படுத்த தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் முகமைக்கு பல்வேறு துறைகள் தரவுகளைப் பகிர்வதை இது உறுதிப்படுத்தியுள்ளது.
அதேபோல், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிலுவைத் தொகைகளை மாற்றியமைப்பதன் மூலம் அவர்களுக்கு உதவும் வகையிலான சிறப்புத் திட்டத்துக்கு ரிசர்வ் வங்கியின் உதவியையும் நாங்கள் நாடியிருக்கிறோம்.
இதனை இங்கு உங்களிடையே எடுத்துக்கூறுவதன் காரணம் என்னவென்றால், நீங்கள் அளிக்கும் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை நாங்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதி, அவற்றை எங்களால் இயன்றவரை விரைவாகச் செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கையை உங்களுக்கு அளிப்பதற்காகத்தான்.
அந்த உணர்வோடுதான், மேலும் உங்கள் யோசனைகளை இன்றைய கூட்டத்தில் நாங்கள் கேட்கிறோம்.
முனைவர் அரவிந்த் சுப்பிரமணியன், இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தபோது வெளியான 2016-17 ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையில் ‘அனைவருக்கும் அடிப்படை வருமானம்’ பற்றி ஒரு அத்தியாயமே உள்ளது. நிதிநிலை பாதிக்காமல் அத்தகைய திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கான சிறந்த வழிமுறைகள் பற்றி உங்கள் கருத்துகளைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்.
கரோனாவுக்குப் பிந்தைய நிலைக்கேற்ப தற்போது நாம் திட்டமிட்டாக வேண்டியுள்ளது. விளிம்பு நிலையில் உள்ளோரைத் தொடர்ந்து பாதுகாப்பதுடன் இணைந்து; வளர்ச்சியையும் முதலீட்டையும் தமிழ்நாட்டில் எப்படி நாம் மீட்டெடுக்கப் போகிறோம் என்பதே எனது முதன்மையான கவலை. அதுபற்றி உங்கள் கருத்துகளைக் கேட்க ஆவலாக உள்ளேன்.
முதலீட்டை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டிய துறைகள் எவை? என்ற கேள்விக்கும் விரிவான விடையை எதிர்பார்க்கிறேன்.
தமிழ்நாட்டுக்கு என்று உள்ள தனிச் சிறப்பான வலிமைகளைப் பயன்படுத்துவது குறித்தும் உங்களது ஆலோசனைகள் தேவை! மாநிலத்தில் உள்ள
படித்த இளைஞர்களுக்கு நல்ல வருமானத்தைப் பெற்றுத்தரும் வேலைவாய்ப்புகளை அளிப்பவையாக இத்துறைகள் அமைய வேண்டும்.
மாநிலத்தின் கடன் சுமையைக் குறைப்பது எனது முக்கியக் கவலை என்று நமது முதல் கூட்டத்திலேயே கூறியிருந்தேன்.
இன்றைய சூழலில், எந்த அளவுக்குக் கடன் சுமை இருக்கலாம். கடன் அளவுகளை எப்படிக் குறைப்பது? என்பது குறித்து ஆலோசனைகளைக் கூறக் கேட்டுக் கொள்கிறேன்.
நமது அரசு மக்களுக்காக உள்ள அரசு; ஏழை எளியவருக்கான அரசு. நாம் எது செய்தாலும் அது அவர்களுக்குப் பயனளிப்பதாக இருக்க வேண்டும். இவை பற்றி மேலும் கருத்துகளைக் கூறுங்கள், குறிப்பாக, திட்டங்களின் பயன் உரிய பயனாளிகளுக்குச் சென்று சேர்வதை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கூறுங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT