Published : 25 Oct 2021 05:27 PM
Last Updated : 25 Oct 2021 05:27 PM
மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிதாகக் காவலர் அங்காடிகள் திறக்க நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 6 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. 2021-2022ஆம் நிதி ஆண்டுக்கான காவல் மானியக் கோரிக்கை கூட்டத்தொடரில் 13.09.2021 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு மாவட்டங்களிலும் காவலர் நலனுக்காக காவலர் அங்காடிகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதனடிப்படையில், டிஜிபி சைலேந்திரபாபு, காவலர் அங்காடி தொடங்குவதற்குப் பொருத்தமான கட்டிடங்களைத் தேர்வு செய்யுமாறு சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், தமிழ்நாடு காவலர் அங்காடிகளுக்கு பொருட்களை விநியோகம் செய்யும் பொருட்டு புதிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, தமிழ்நாடு காவலர் அங்காடிகளுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் ஒப்பந்தங்களைப் புதுப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு காவலர் அங்காடிகளுடன் ஒப்பந்தம் செய்ய விருப்பமுள்ள நிறுவனங்கள் http://www.tnpolicecanteen.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சரியான இணைப்புகளுடன் தபால் மூலம் காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT