Published : 25 Oct 2021 03:46 PM
Last Updated : 25 Oct 2021 03:46 PM
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான நடிகையின் பாலியல் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் 351 பக்க குற்றப்பத்திரிகையை அடையாறு மகளிர் காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
சென்னை பெசன்ட் நகரில் வசிக்கும் நடிகை ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்திருந்தார். அதில், "மலேசியாவைச் சேர்ந்த நான், சென்னையில் உள்ள மலேசிய நாட்டின் துணைத் தூதரகத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றினேன். 2017-ல் அதிமுக ஆட்சியில் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் நட்பு ஏற்பட்டது.
அவர் என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன்-மனைவியாக வாழ்ந்தோம். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, என்னைத் திருமணம் செய்து கொள்வதாகத் தெரிவித்தார்.
அவருடன் இருந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்றேன். வலுக்கட்டாயமாக அதைக் கலைக்கச் செய்தார். தற்போது என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்து மிரட்டுகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கில், கடந்த ஜூலை மாதம் 7-ம் தேதி அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீஸார் 351 பக்க குற்றப்பத்திரிகையை இன்று (அக். 21) தாக்கல் செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் மணிகண்டன் மீது 342, 352 ஆகிய இரண்டு பிரிவுகளையும் கூடுதலாகச் சேர்த்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT