Published : 25 Oct 2021 11:17 AM
Last Updated : 25 Oct 2021 11:17 AM

ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி பழநி தேவஸ்தான விடுதியில் இலவசமாக அறை கேட்ட நபர் கைது

பழநியில் ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி இலவசமாக அறை கேட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மாயவரத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் பழநி மலையடிவாரத்தில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிக்கு சைரன் பொருத்திய காரில் வந்து, தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று அறிமுகப் படுத்திக்கொண்டார்.

பின்னர், தனக்கு தேவஸ்தான விடுதியில் இலவசமாக தங்கும் அறை வழங்குமாறும் கேட்டுள்ளார். இந்நிலையில் வழக்கமாக ஐஏஎஸ்.அதிகாரிகள் வந்தால் உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது வழக்கம். எனவே தங்கும் விடுதியில் இருந்த மேலாளர் அடையாள அட்டையை கேட்டும், பழநியில் உள்ள வருவாய்த்துறை அதிகாரி ஒருவரை பரிந்துரை செய்யவும் கேட்டுள்ளார்.

அப்போது, குமார் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேகமடைந்த கோயில் ஊழியர்கள் பழநி அடிவாரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையறிந்த குமார் காரை விட்டுவிட்டு தப்பி ஓடினார்.

அவரை துரத்திச் சென்ற கோயில் ஊழியர்கள், குமாரை பிடித்து வந்து பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் மயிலாடுதுறையில் வசித்துரும் குமார் காரில் சைரன் பொருத்திக் கொண்டு, தமிழக அரசு என்று பதாகையை மாட்டிக்கொண்டு வலம் வந்தது தெரியவந்தது. பல இடங்களில் தன்னை ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரி என்று சொல்லிக்கொண்டு சலுகைகளைப் பெற்று அனுபவித்ததும் தெரியவந்துள்ளது.

கடைசியாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்ற குமார் தன்னை ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி சிறப்புதரிசனம் செய்து விட்டு வந்ததும் தெரியவந்தது.

குமார் மீது வழக்குப் பதிவு செய்த பழநி அடிவாரம் போலீஸார் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x