Published : 25 Oct 2021 03:07 AM
Last Updated : 25 Oct 2021 03:07 AM
பல்கலைக்கழக மானியக்குழு (யுசிஜி) உத்தரவுக்கு மாறாக அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி. கட்டாயம் என அறிவித்ததால் பட்டதாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், இடஒதுக்கீடு முறை சரியாகப் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரிகளில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், நூலகர்உள்ளிட்ட பதவிகளில் 352 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 13-ம் தேதி வெளியிட்டது. இந்தப் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் பணிகளில் சேர யுஜிசி சார்பில் கல்வித் தகுதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, உதவிப் பேராசிரியர் பணிக்கு முதுநிலை பட்டப் படிப்புடன், நெட்/ ஸ்லெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் பிஎச்.டி. முடித்திருப்பது அவசியமாகும். இந்நிலையில், கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் கட்டாயம் எனவும், இந்த நடைமுறை 2021 ஜூலை 1-ம் தேதி முதல் அமலாகும் எனவும் யுஜிசி 2018-ல் அறிவிப்பு வெளியிட்டது.
அதேநேரம், கரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக உயர்கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதால், உதவிப் பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி. தகுதி கட்டாயம் என்ற விதிமுறையில் இருந்து 2023 வரை விலக்கு அளித்து யுஜிசி உத்தரவிட்டது. அதற்குமாறாக, உதவிப் பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி. கட்டாயம் என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு பட்டதாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முதுநிலைப் பட்டதாரிகள் கூறும்போது, "கரோனா பரவலால் பிஎச்.டி. படிப்பை முடிப்பதில் பட்டதாரிகள் பலருக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பிஎச்.டி. கட்டாயம் என்ற விதியை யுஜிசிதளர்த்தியுள்ளது. மேலும், ஏஐசிடிஇவிதிகளின்படி பொறியியல் அல்லாத அறிவியல், மொழி உட்பட இதர பாடப் பிரிவுகளில் முதுநிலைப் படிப்புடன் நெட்/ஸ்லெட் தகுதித்தேர்வில் பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். அதற்குமாறாக, அனைவருக்கும் பிஎச்.டி. கட்டாயம் என்ற அறிவிப்பால் பலரின்வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, யுஜிசியின் உத்தரவைப் பின்பற்றி, பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் முன்வர வேண்டும்" என்றனர்.
அரசு தலையிட வேண்டும்
அகில இந்திய தனியார் கல்லூரிஆசிரியர்களின் கூட்டமைப்பு தலைவர் கே.எம்.கார்த்திக் கூறியதாவது: தமிழக அரசின் சட்டவிதிகளைமீறி பல ஆண்டுகளாக எஸ்.டி. பிரிவுக்கான இடஒதுக்கீட்டை வழங்காமல், அண்ணா பல்கலைக்கழகம் பணியிடங்களை நிரப்பி வருகிறது.
2020-ல் 312 இடங்களை நிரப்புவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பாணை வெளியிட்டது. அதிலும் எஸ்.டி. பிரிவு இடங்கள் வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மீண்டும் திருத்தி வெளியிட்ட அறிவிப்பாணையிலும் எஸ்.டி. பிரிவுக்கு ஓர் இடம்கூட ஒதுக்கப்படவில்லை. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். அதேபோல, வன்னியருக்கான 10.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீடும் அமல்படுத்தப்படவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசுதலையிட்டு, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT