Published : 25 Oct 2021 03:08 AM
Last Updated : 25 Oct 2021 03:08 AM

தீபாவளி பண்டிகையையொட்டி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்: துணி, பட்டாசு, இனிப்பு விற்பனை களைகட்டியது

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் புத்தாடைகள் வாங்க நேற்று திரண்ட மக்கள் கூட்டம்.படம்: க.ஸ்ரீபரத்

சென்னை

தீபாவளி பண்டிகையையொட்டி துணி, பட்டாசு, இனிப்புகளை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள சூழலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சென்னை தியாகராயநகருக்கு காலை 10 மணி முதலே துணிகளை வாங்க பொதுமக்கள் ஏராளமாக வரத் தொடங்கினர்.

நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. இதனால், சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை பெரும்பாலான கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் நேற்று நாள் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஒலிப்பெருக்கிகளின் மூலம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வந்தனர். இருப்பினும், கூட்டம் அலைமோதியதால் சமூக இடைவெளி முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. பெரும்பாலானோர் முககவசங்களை அணிந்திருந்தனர்.

புரசைவாக்கத்தில் உள்ள துணிக்கடைகளிலும் நேற்று காலை முதல் கூட்டம் அதிகமாக இருந்தது. வண்ணாரப்பேட்டை, பள்ளிக்கரணை, குரோம்பேட்டை உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் வணிக பகுதிகளில் இயங்கி வரும் கடைகளிலும் நேற்று மக்கள் புத்தாடைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

புரசைவாக்கம், தியாகராயநகர் உட்பட சென்னை முழுவதும் இயங்கி வந்த பட்டாசு கடைகளுக்கும் நேற்று ஏராளமானோர் தங்களது குழந்தைகளுடன் வந்து பட்டாசுகளை வாங்கி சென்றனர். நேற்று மாலை நேரங்களில் பட்டாசு கடைகளில் பட்டாசு வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

மேலும் ஏராளமானோர் தங்களது குடும்பத்தினருக்கு தேவையான இனிப்புகளை வாங்க இனிப்புக் கடைகளில் குவிந்தனர். இதனால், சென்னை முழுவதும் நேற்று இனிப்புகளை விற்பனை செய்யும் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் தீபாவளி பண்டிகையையொட்டிய விற்பனை களைகட்டியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x