Published : 24 Oct 2021 06:28 PM
Last Updated : 24 Oct 2021 06:28 PM
திருவண்ணாமலை அருகே கனமழையால் 6 ஏரிகளும் நிரம்பி வழிந்ததால் 2-வது நாளாக புறநகர்ப் பகுதிகள் தத்தளிக்கின்றன.
திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.
திருவண்ணாமலை அருகே உள்ள ஆடையூர் ஏரி, வேங்கிக்கால் ஏரி, சேரியந்தல் ஏரி, கீழ்நாத்தூர் ஏரி, கும்பன் ஏரி மற்றும் நொச்சிமலை ஏரிகள் நிரம்பி அதிகளவு தண்ணீர் வெளியேறியதால், 2-வது நாளாக புறநகர்ப் பகுதிகள் முழுவதும் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கும்பன் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால், கீழ்நாத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளி நீர் சூழந்தது.
இதையடுத்து, கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையின் கீழே செல்லும் 5 சிறிய பாலங்களில் இருந்த அடைப்புகளை உடனடியாக அகற்றி, கும்பன் ஏரியில் இருந்து துரிஞ்சலாற்றுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஏந்தல், பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஆட்சியர் பா.முருகேஷ் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது அவர்கள், அடைப்புகளை சரி செய்ய துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
கும்பன் ஏரியில் மீன் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இதற்காக, புறவழிச்சாலை அருகே உள்ள நீர் வழிப்பாதையில் தடுப்பு வலைகள் அமைக்கப்பட்டிருந்தது. தண்ணீரை வெளியேற்றுவதற்காக, தடுப்பு வலைகள் அகற்றப்பட்டதாலும் மற்றும் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதாலும் தண்ணீரோடு சுமார் 10 கிலோ எடை உள்ள மீன்கள் உட்பட அனைத்து மீன்களும் வெளியேறியன.
திண்டிவனம் சாலை மற்றும் புறவழிச்சாலையில் உள்ள பாலங்களில் வழிந்தோடிய வெள்ள நீரில் துள்ளி குதித்த மீன்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிடித்துச் சென்றனர்.
வேங்கிக்கால் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் திருவண்ணாமலை – வேலூர் நெடுஞ்சாலையில் 2-வது நாளாக வெள்ள நீர் செல்கிறது. வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே உள்ள அனைத்து குடியிருப்புகளையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் பாதிப்பு தொடர்கிறது. மேலும், சேரியந்தல் ஏரியில் இருந்து 2-வது நாளாக அதிகளவு தண்ணீர் வெளியேறி வருவதால், திருவண்ணாமலை – அவலூர்பேட்டை சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் காலி இடங்களில் வெள்ள நீர் தேங்கி உள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கும்பன் ஏரியில் உடைப்பு மற்றும் நொச்சிமலை ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர், திருவண்ணாமலை – திண்டிவனம் சாலையை அபகரித்துக் கொண்டது. மேலும், திண்டிவனம் சாலை அருகே அமைந்துள்ள குடியிருப்புகளில் சுமார் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி இருப்பதால், ஏரியை போன்று காட்சி அளிக்கிறது. சிறிய மழைக்கு கூட தாக்குபிடிக்க முடியாத இப்பகுதியானது, ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரால், அதிகளவு பாதிப்பை சந்தித்துள்ளது.
இது குறித்து புறநகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும்போது, “2-வது நாளாக, நாங்கள் அவதிப்படுகிறோம். பால், தண்ணீர், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க வெளியே செல்ல முடியவில்லை. இருக்கும் பொருட்களை வைத்து, உணவு சாப்பிட்டு வருகிறோம். இந்த நிலை தொடர்ந்தால், உணவுக்கு கூட சிரமம் ஏற்பட்டுவிடும்.
திருவண்ணாமலை புறநகர்ப் பகுதியில் உள்ள ஏரிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் முழுமையாக, துரிஞ்சலாற்றுக்கு செல்லும். அந்த ஆற்றுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி இருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது. பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பிறகு, நீர்வரத்து கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்கின்றனர். வட கிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT