Published : 24 Oct 2021 04:25 PM
Last Updated : 24 Oct 2021 04:25 PM
குமரி விசைப்படகின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய வெளிநாட்டு கப்பல் மீது இரு பிரிவுகளில் மெரைன் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் கொட்டில்பாட்டை சேர்ந்த ராஜமணி என்பவரின் சிஜூமோன் என்ற விசைப்படகில் 17 மீனவர்கள் கடந்த 22ஆம் தேதி மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து மும்பை நோ்கி சென்ற பனாமா நாட்டைச் சேர்ந்த நேவியாஸ் வீனஸ் என்ற சரக்கு கப்பல் மீனவர்களின் விசைப்படகு மீது மோதியது.
இதில் குமரி மாவட்டம் மேலமணக்குடியை சேர்ந்த அருள்ராஜ், குளச்சலை சேர்ந்த ஜாண் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
படகில் இருந்த மேலும் 15 மீனவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். படுகாயம் அடைந்த இரு மீனவர்களையும் இந்திய கடற்படையினர் மீட்டு கொச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் மீன்பிடி விசைப்படகு மீது மோதிய பனாமா நாட்டு சரக்கு கப்பல் மீது குளச்சல் கடலோர காவல்படை போலீஸார் கடல்வழி பாதையில் கப்பலை அஜாக்கரதையாக ஓட்டுதல், விபத்துக்குள்ளாக்கி காயம் ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கு குறித்து மெரைன் போலீஸார் மீனவர்கள், மற்றும் பனாமா நாட்டு சரக்கு கப்பலுடன் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT