Last Updated : 24 Oct, 2021 02:26 PM

 

Published : 24 Oct 2021 02:26 PM
Last Updated : 24 Oct 2021 02:26 PM

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி.

கோவை

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் திமுக வென்றது என்ற வாசகத்தை திமுக தலைவரிடம் தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பேசினார்.

கோவை வடகோவை மேம்பாலம் அருகேயுள்ள, மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று (23-ம் தேதி) நடந்தது.

இதில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.

பின்னர் அவர் பேசும்போது,‘‘ திமுக ஆட்சி எப்போது வரும் என ஏங்கியவர்கள் நீங்கள் எனத் தெரியும். இதற்காக கடினமாக உழைத்தவர்கள் நீங்கள். அதேசமயம், 100 சதவீத பேரில், 20 சதவீதம் பேர் சரியான முறையில் அவர்களது பணியை செய்யவில்லை.

அந்த 20 சதவீதம் பேர் யார் என்பதை கண்டெடுத்து, களை எடுத்துவிட்டால் இயக்கம் வெற்றி பெறும். ஏன் அந்த நிலை வந்தது என நினைத்துப் பார்க்க வேண்டும்.

மக்களின் தேவைகளை அறிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் திமுக வென்றது என்ற வாசகத்தை திமுக தலைவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மக்களுக்குப் பணியாற்ற கூடிய வாய்ப்பு நம்மிடத்தில் உள்ளது. எந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம். அதற்காக காத்திருக்க வேண்டாம். இப்போதே நம் தேர்தல் பணியை ஆரம்பிக்க வேண்டும்,’’ என்றார்.

இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது, கட்சியை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை, கட்சி நிர்வாகிகளிடம் அவர் தெரிவித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, பொள்ளாச்சி தொகுதி திமுக எம்.பி கு.சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சரும், திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவருமான பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்டப் பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், சிஆர்.இராமச்சந்திரன், பையா என்ற ஆர்.கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x