Published : 24 Oct 2021 12:08 PM
Last Updated : 24 Oct 2021 12:08 PM
நியாயவிலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்யப்படுவதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கற்பகம் என்ற பெயரில் பனை வெல்லத்தை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யும் நடைமுறையை ராமநாதபுரம் சாயல்குடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
கற்பகம் எனப்படும் கருப்புக்கட்டியில் மனித ரத்தத்தை அபிவிருத்தி செய்யும் தயமின், ரிபோபிளேவின் என்ற B வைட்டமின்களும், நிகோடினிக் ஆசிட் என்ற B 3 யும், அஸ்கார்பிக் ஆசிட் என்ற C வைட்டமினும் இருக்கின்றன.
இவை மனித உடல் வளர்ச்சிக்கு மிக தேவையானவை. நியாயவிலைக் கடை, ரேஷன் ஷாப் மூலம் இவை எல்லா மக்களையும் சென்றடைந்து விடும்.
இதேபோல் வேம்பு, கற்றாழை மற்றும் மூலிகைகளால் ஆன சோப்பு தயாரிப்பது மக்கள் நலன் கருதி செய்யப்படும் நற்காரியங்களாகும். இவற்றிற்கான பயிச்சி நிலையத்தை தொடங்கி வைத்துள்ளதை பெரிதும் வரவேற்கிறேன். இயற்கையோடு இணைந்து மனித வாழ்வின் மேம்பாட்டை நோக்கிச்செல்லும் செயல்களாகும்.
தமிழ்த்தறி என்ற தலைப்பில் ஆரணி, சேலம், கோவை, சின்னாளப்பட்டி, திண்டுக்கல், பரமக்குடி ஆகிய ஊர்களில் நெய்யப்படும் புகழ்பெற்ற, பாரம்பரிய பட்டுச்சேலைகளும், ஜமுக்காளம், காஞ்சிபுரம் பட்டுப்பாவாடை, சட்டை ஆகியவை விற்பனைக்கு விநியோகிக்கப்பட்டு நெசவாளர்களுக்கு ஊக்கம் அளித்திருப்பதையும் போற்றுகிறேன்.
இந்த முயற்சிகளை தமிழக முதலமைச்சர் தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் தமிழர்களின் அடையாளம் காக்கப்பட்டு நிச்சையம் உயர்நிலைக்கு செல்கிற வாய்ப்பு ஏற்படும். இத்தகைய முயற்சிகளை மேற்கொண்ட தமிழக முதல்வரை வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT