Published : 23 Oct 2021 07:01 PM
Last Updated : 23 Oct 2021 07:01 PM
தனியார் தொழிற்சாலையில் கிரேன் ரோப் அறுந்து விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 20 தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர். கலவரம் நடைபெற்ற தொழிற்சாலையில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி அருகே சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் செல்போன் டவர் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அஜ்பர் மாலிக் (30) என்பவர் கிரேன் ரோப் அறுந்து, அதிலிருந்த இரும்பு ராடு விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இறந்த தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க கோரியும், உரிய பாதுகாப்பு வழங்க வலயுறுத்தியும் இறந்த தொழிலாளியின் உடலை எடுக்கவிடாமல் தொழிற்சாலை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த சேதராப்பட்டு போலீஸார் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் போராட்டத்தை கைவிட தொழிலாளர்கள் மறுத்ததால் போலீஸாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தி கலைத்து இறந்த தொழிலாளியின் உடலை மீட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் போலீஸ் வாகனத்தை கவிழ்த்து அடித்து நொறுக்கினர். மேலும் தொழிற்சாலையில் இருந்த பொருட்கள் மற்றும் வாகனங்களை சூறையாடினர். இச்சம்பவத்தில் போலீஸார், தொழிலாளர்கள் 10 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சக ஊழியரான கெல்லம் முஸ்தபா மாலிக் கொடுத்த புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் பிளான்ட் மேலாளரான திண்டிவனம் திருக்குமரன்(45), சூப்பர்வைசரான ஒடிசா பிரதாப் பாதி(35) ஆகியோர் மீது சேதராப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் சேதராப்பட்டு காவலர் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆரிபுல்(19), குலாமொகைதீர்(19), முகைமின் மொந்தால்(20) உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவான அவர்களை போலீஸார் தேடி வரும் நிலையில் 20 பேரை செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வன்முறை சம்பவம் நடைபெற்ற தனியார் தொழிற்சாலையில் இன்று(அக். 23) அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடந்த சம்பவம் குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடமும், வடமாநில தொழிலாளர்களிடமும் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:‘‘தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த அஜ்பர் மாலிக் என்ற தொழிலாளி இறந்துள்ளார். இதனால் சக தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அஜ்பர் மாலிக் இறப்புக்கு உன்மையான காரணம் என்ன? தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு சரியான முறையில் பாதுகாப்பு அளித்ததா?
தேவையான உபகரணங்கள் கொடுத்ததா? என்பது குறித்து தனிக்குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்து விசாரணை நடத்தப்படும். அந்த குழு அளிக்கும் ஆய்வறிக்கையின் அடிப்படையில், தொழிற்சாலை நிர்வாகம், தொழிலாளர்கள், போலீஸார் என யார் சவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.’’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT