Published : 23 Oct 2021 05:57 PM
Last Updated : 23 Oct 2021 05:57 PM

ரேஷன் மூலம் பனை வெல்லம் விற்பனை; காதி பொருட்களுக்குத் தனிச் செயலி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நியாய விலைக் கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டம், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியப் பொருட்களைக் கொள்முதல் செய்திட புதிய கைப்பேசி செயலி ஆகிய திட்டங்களைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''புதிய வகை குளியல் சோப்புகள்

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் குறிஞ்சி சந்தனம், வேம்பு, இயற்கை மூலிகை, குமரி கற்றாழை போன்ற குளியல் சோப்பு வகைகள் மக்களைக் கவரும் வண்ணம் உற்பத்தி செய்யப்பட்டு சிறந்த முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நவீன காலத்திற்கேற்றவாறு சந்தையில் உள்ள இதர சோப்புகளுக்கு இணையாக ரோஸ், லேவண்டர், சந்தனம் மற்றும் செஞ்சந்தனம் எனும் 4 வகையான நறுமணங்களில் 125 கிராம் அளவுகளில் மக்கள் விரும்பும் வண்ணம் நவீன வடிவமைப்பிலான அட்டைப் பெட்டிகளில், வாரிய கதரங்காடிகள் மற்றும் சந்தையில் பிரசித்தி பெற்ற பல்பொருள் அங்காடிகளின் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

புதிய கண்ணாடி பாட்டில்கள் மூலம் தேன் விற்பனை

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் பச்சைத் தேன், நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தேனீ விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, பதப்படுத்தி அக்மார்க் தரத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கதர் அங்காடிகளில் கடந்த பல ஆண்டுகளாக பெட் பாட்டில்களில் தேனை அடைத்துப் பல்வேறு அளவுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உணவு மற்றும் பாதுகாப்புத் துறையின் அறிவுரைப்படி, கண்ணாடி பாட்டில்களில் தேனை அடைத்து விற்பனை செய்திடும்போது தேனின் பண்புகள் நீண்ட நாட்களுக்கு மாறாமல் இருக்கப்பெறும் என்பதாலும், சந்தையில் பிரசித்தி பெற்ற பல்பொருள் அங்காடிகளின் மூலம் காதி தேனை விற்பனை செய்யும் நோக்கிலும், நவீன கண்ணாடி பாட்டில்களில் பொதுமக்களைக் கவரும் வண்ணம் அழகிய லேபிள்களைக் கொண்ட 250 கிராம் மற்றும் 500 கிராம் அளவுகளில் தேன் விற்பனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு, பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு “கற்பகம்” என்ற பெயரில் நியாய விலைக் கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பல்பொருள் அங்காடிகளில் கரும்பனை எனும் பெயரில் பனைவெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய பொருட்களைக் கொள்முதல் செய்திட புதிய கைப்பேசி செயலி

வணிகக் களத்தில் ஏற்பட்டு வரும் அபரிமிதமான மின்னணுத் தொழில்நுட்ப வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு இளம் தலைமுறையினர் எளிதில் இணையதள சேவையினைப் பயன்படுத்தி தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியப் பொருட்களைக் கொள்முதல் செய்திட “tnkhadi” எனும் ஆண்ட்ராய்டு / iOS இயக்க கைப்பேசி செயலியை முதல்வர் அறிமுகப்படுத்தினார்.

பனை வெல்லம் மற்றும் பனைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிலையம்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சாயல்குடியில் “ராமநாதபுரம் – சிவகங்கை” மாவட்ட பனை வெல்லக் கூட்டுறவு விற்பனை சம்மேளனத்திற்குச் சொந்தமான இடத்தில், பனைத் தொழிலை மேம்படுத்திடும் நோக்கில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.53.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பனை வெல்லம் மற்றும் பனைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

துணிநூல் துறை என்ற புதிய துறை உருவாக்கம்

2021-22ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தவாறு, கைத்தறி மற்றும் துணிநூல் துறையைப் பிரித்து, தனியாக துணிநூல் துறை என்ற துறை உருவாக்கப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x