Last Updated : 23 Oct, 2021 04:50 PM

 

Published : 23 Oct 2021 04:50 PM
Last Updated : 23 Oct 2021 04:50 PM

குமரி ஆழ்கடலில் விசைப்படகு மீது வெளிநாட்டு கப்பல் மோதி விபத்து; இரு மீனவர்கள் படுகாயம்- 15 பேர் மீட்பு

விபத்துக்குள்ளான படகு

நாகர்கோவில்

குளச்சலில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குமரி விசைப்படகு மீது கப்பல் மோதியது. இவ்விபத்தில் இரு மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். 15 மீனவர்கள் மீட்கப்பட்டு கரைசேர்க்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாட்டைச் சேர்ந்த ராஜமணி என்பவருக்குச் சொந்தமான சிஜூமோன் என்ற விசைப்படகில், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று குளச்சல், கொட்டில்பாடு, குறும்பனை, மேலமணக்குடி, ஆரோக்கியபுரம், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மீனவர்கள் என மொத்தம் 17 பேர் மீன்பிடிக்கச் சென்றனர்.

குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 20 மைல் நாட்டிக்கல் தொலைவில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிங்கப்பூரிலிருந்து மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பனாமா நாட்டைச் சேர்ந்த நேவியாஸ் வீனஸ் என்ற சரக்கு கப்பல், மீனவர்களின் விசைப்படகு மீது வேகமாக மோதியது. இதில் குமரி மீனவர்களின் விசைப்படகு சேதப்படுத்தப்பட்டதுடன் மீனவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

இவ்விபத்தில் மேலமணக்குடியைச் சேர்ந்த அருள்ராஜ், குளச்சலைச் சேர்ந்த ஜாண் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 15 மீனவர்களும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அப்போது விசைப்படகை ஓட்டிசென்ற ரூபன்ரோஸ் என்ற மீனவர், இந்திய கடலோரக் காவல்படைக்கு வயர்லெஸ் மூலம் விபத்து குறித்த தகவலைத் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்திய கடலோரக் காவல்படையினர் இன்று அதிகாலை ஆழ்கடலுக்கு விரைந்து சென்று, காயமடைந்த மீனவர்கள் ஜாண், அருள்ராஜ் ஆகிய இருவரையும் மீட்டு கொச்சின் துறைமுகத்திற்குக் கொண்டு சென்றனர்.

இதைப்போல் விபத்து ஏற்படுத்திய பனாமா சரக்கு கப்பலையும், அதில் இருந்தவர்களையும் விசாரணைக்காக கொச்சின் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் படுகாயம் அடைந்த இரு குமரி மீனவர்களும் கொச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விபத்திற்குள்ளான விசைப்படகில் இருந்த மீதமுள்ள 15 மீனவர்களையும் பக்கத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக விசைப்படகு மூலம் மீனவர்கள் மீட்டு குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாகக் கரைசேர்த்தனர். அவர்கள் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மீன்பிடிப் படகு மீது வெளிநாட்டு சரக்கு கப்பல் மோதிய சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாகத் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் மத்திய, மாநில அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், ''தேசியக் கடல் பகுதியிலும், சிறப்பு பொருளாதாரக் கடல் பகுதியிலும் மீனவர்கள் பாதுகாப்புடன் மீன்பிடிப்பதற்கு உரிய வகையை மத்திய மாநில அரசு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். மீன்பிடி விசைப்படகு மீது மோதி விபத்து ஏற்படக் காரணமான கப்பல் மாலுமி மற்றும் கப்பல் உரிமையாளர் மீது கொலை மயற்சி வழக்குப் பதிவு செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x