Published : 01 Mar 2016 05:15 PM
Last Updated : 01 Mar 2016 05:15 PM

அம்மா ஆட்டோ உருவானது எப்படி?- தன் வரலாறு கூறும் ஜெயராமன்!

ஆட்டோ முழுவதும் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம். அந்த ஆட்டோவில் ஒலிப்பதோ அதிமுகவின் பிரச்சாரப் பாடல். ஆட்டோ டிரைவர் பிரச்சாரம் பண்ணுவதோ முழுக்கவே அதிமுகவின் சாதனைகள் பற்றிதான்.

இப்படி வித்தியாசமாக சென்னையில் ஒருவரா என்று ஆட்டோவை நிறுத்தி பேச்சு கொடுத்தேன். ஆர்வம் பொங்கப் பேசினார்.

"என்னுடைய பெயர் ஜெயராமன். தேனி மாவட்டம் பெரியகுளம் என் ஊர். தமிழ்நாடு முழுவதும் அம்மாவுக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரச்சாரம் பண்ணுகிறேன். 40 ஆண்டுகளாக இப்பணியில் தீவிரமாக இருக்கிறேன். இந்த ஆட்டோவே அம்மா வாங்கி கொடுத்தது தான். அம்மா வாங்கிக் கொடுத்த ஆட்டோவை, அம்மாவின் தேர்தல் பிரச்சாரத்துக்கே பயன்படுத்தி வருகிறேன். என்னுடைய முழுநேரப் பணியே இது தான். தற்போது சென்னையில் இருந்து என் பிரச்சாரப் பயணம் தொடங்கி இருக்கிறது" என்றார்.

பெட்ரோல் செலவு, சாப்பாட்டுக்கு எல்லாம் என்ன பண்ணுகிறீர்கள்?

"நான் போகும் இடங்களில் இருக்கும் கட்சிக்காரர்கள், அமைச்சர்கள் என்னுடைய வண்டியின் பெட்ரோல் செலவுக்கும் எனக்கும் காசு கொடுப்பார்கள். 64 வயது ஆகிவிட்டது. எம்.ஜி.ஆரின் ரசிகனாக இருந்து தற்போது அம்மாவின் பக்தனாகி இருக்கிறேன். 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று இப்போதே என் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டேன். எம்.ஜி.ஆர். போல வேடமிட்டு தான் பிரச்சாரம் செய்கிறேன். சென்னை முழுக்க சுற்றிவிட்டு, அடுத்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல இருக்கிறேன்."

இப்படி செய்வதால் உங்கள் குடும்பத்தினர் ஒன்றும் சொல்லவில்லையா?

"என்னுடைய பெண்ணுக்கு கல்யாணமாகிவிட்டது. பையன் படிச்சுட்டு சும்மா தான் இருக்கான். வேலைக்கு அம்மாவிடம் கேட்டு முயற்சி பண்ணிட்டு இருக்கான். அம்மா தான் என் பையனுக்கு வேலை போட்டு தரணும்"

பிரச்சார உத்திகளை எப்படி கற்றுக்கொண்டீர்கள்?

"பிரச்சார உத்தியெல்லாம் யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. நானே அம்மா செய்த சாதனைகளை ஒலிபெருக்கி மூலமாக பிரச்சாரம் செய்வேன். தேர்தல் இல்லாத நேரத்திலும் அம்மா புகழ் பாடல்கள், சாதனைகள் எல்லாம் பிரச்சாரம் செய்வேன்.

15 வருடமாக அம்மாவின் புகழைப் பரப்புவது மட்டும் தான் என் வேலை. முதலில் இரு சக்கர வாகனத்தில் பிரச்சாரம் செய்தேன். அதற்குப் பிறகு அம்மாவிடம் ஆட்டோ கேட்டேன், வாங்கிக் கொடுத்துவிட்டார்கள்.

3 சக்கர வாகனத்தில் பிரச்சாரத்திற்குப் போகிறேன் என்று அம்மாவிடம் அனுமதி கேட்டேன். கொஞ்சம் பணம் கொடுத்து 'உங்கள் பயணத்திற்கு என்னுடைய வாழ்த்துகள்' என்று அம்மா சொன்னார். என் உயிர் இருக்கும் வரை அம்மாவின் தீவிர விசுவாசியாகவே இருப்பேன்'' என்று உருக்கமாகக் கூறினார் ஜெயராமன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x