Last Updated : 18 Mar, 2016 02:59 PM

 

Published : 18 Mar 2016 02:59 PM
Last Updated : 18 Mar 2016 02:59 PM

சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் திருமணமான சகோதரர், சகோதரியும் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்யலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சாலை விபத்தில் உயிரிழப்போரின் திருமணமான சகோதரர், சகோதரி, மகள் ஆகியோரும் விபத்து இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அபுதாபியில் பணிபுரிந்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த விஜயகுமார், 17.3.2013-ல் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து விபத்து இழப்பீடு கோரி விஜயகுமாரின் பெற்றோர் மற்றும் அவரது திருமணமான சகோதரி ஆகியோர் கும்பகோணம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இவர்களுக்கு ரூ.19.11 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்த்துக்கு 21.7.2014-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தது. அதில், விபத்தில் இறந்தவரின் திருமணமான சகோதரிக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது தவறு.

அவர் திருமணாகி கணவருடன் தனியாக வாழ்கிறார். அவர் விபத்தில் இறந்தவரை நம்பியிருக்கவில்லை. எனவே அவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது சரியல்ல எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஆர்.மகாதேவன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: மோட்டார் வாகன சட்டத்தில் விபத்தில் உயிரிழந்த நபர்களை சார்ந்து இருப்பவர்கள் மட்டுமே இழப்பீடு கேட்டு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறப்படவில்லை. இறந்தவர்களின் சட்டப்பிரதிநிதிகள் யாராக இருந்தாலும் இழப்பீடு கேட்டு மனுத்தாக்கல் செய்யலாம்.

விபத்தில் உயிரிழப்போரை சார்ந்து இருப்பவர்கள் மட்டுமே இழப்பீடு கேட்டு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்றால், மோட்டார் வாகன சட்டத்தில் அந்த வார்த்தை கண்டிப்பாக பயன்படுத்தப்பட்டு இருக்கும். வேலையாள் இழப்பீடு சட்டத்தில் அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் விபத்தில் உயிரிழப்போரின் திருமண சகோதரர், திருமணமான சகோதரி, திருமணமான மகள் யார் வேண்டுமானாலும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்யலாம்.

எனவே இந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. 8 வாரத்தில் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x