Published : 23 Oct 2021 03:06 AM
Last Updated : 23 Oct 2021 03:06 AM

தாராசுரம் கோயிலில் இருந்து எடுக்கப்பட்ட சிலைகள் மீண்டும் கோயிலிலேயே பிரதிஷ்டை செய்யப்படுமா?- குடமுழுக்கு நடத்தவும் பக்தர்கள் எதிர்பார்ப்பு

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்.

திருச்சி

கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் இருந்து எடுக்கப்பட்டு தஞ்சாவூர் கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள சுவாமி சிலைகளை மீண்டும் கோயிலிலேயே பிரதிஷ்டை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் 12-ம் நூற்றாண்டில் 2-ம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பழமையான கோயிலாகும். யுெனஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இக்கோயில், இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயில் பழுதடைந்த நிலையில் இருந்ததால், இங்கிருந்த ஏராளமான சிலைகளின் பாதுகாப்பு கருதி, தொல்லியல் துறையினர் தஞ்சாவூரில் உள்ள கலைக்கூடத்துக்கு கொண்டு சென்று வைத்துள்ளனர். இந்நிலையில், பக்தர்களின் வழிபாட்டில் இருந்த இந்த சிலைகளை மீண்டும் கோயிலிலேயே பிரதிஷ்டை செய்து, குடமுழுக்கும் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலய இறைவழிபாட்டு மன்றச் செயலாளர் என்.பாலசுப்பிரமணியன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று 17 ஆண்டுகள் ஆகின்றன. எனவே, மீண்டும்இக்கோயிலில் குடமுழுக்கு நடத்த வேண்டும். இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட நித்திய வழிபாட்டில் இருந்த சிலைகள் தற்போது மிகவும் சேதமடைந்துவிட்டன. எனவே, குடமுழுக்குக்கு முன்பு, இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், லட்சுமி, சரஸ்வதி, பிச்சாடனர், சூரியன், பைரவர், மற்றும் நவக்கிரகங்கள் சிலைகளை மீண்டும் கோயிலில் பிரதிஷ்டை செய்து, பழுதடைந்த கிழக்கு மொட்டை கோபுரத்தை சீரமைக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவும் அனுப்பியுள்ளோம் என்றார்.

இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: தாராசுரம் கோயிலில் உள்ள சிலைகள் தஞ்சாவூரில் உள்ள கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. எந்தெந்த சிலைகள் எங்கெங்கு இருந்தன என கோயில் கல்வெட்டில் விவரங்கள் உள்ளன. அதன்படி மீண்டும் அந்த சிலைகளை அங்கேயே பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

ஆகம விதிப்படி நிறுவப்பட்டு, கண்கள் திறக்கப்பட்டு, தினசரி பக்தர்களின் வழிபாட்டில் இருந்த இந்த திருமேனிகளை கோயிலில் இருந்து அப்புறப்படுத்தி பல ஆண்டுகளாக வேறு இடத்தில் வைத்திருப்பது தவறானது. உலகப் பாரம்பரிய சின்னமாக இக்கோயில் அறிவிக்கப்பட்டதால், ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வருகின்றனர். ஆனால் இங்கு விக்ரகங்கள் இல்லாத வெறும் மாடங்கள் மட்டும் இருப்பது பெரும் குறைதான்.

மேலும், தாராசுரம் கோயிலைச் சுற்றிஉள்ள பகுதிகள் மேடாகி விட்டதால், கோயில்ஏறத்தாழ 5 அடி அளவுக்கு பள்ளத்தில் இருக்கிறது. இதனால், மழைக் காலங்களில் நீர் தேங்குகிறது. இதை வெளியேற்ற அமைக்கப்பட்ட புதைவடிகால் அமைப்புகள் காலப்போக்கில் சேதமடைந்துவிட்டன. இதனால், மழைநீர் வடியாமல் கோயிலிலேயே தேங்குகிறது. இந்த அமைப்பை சீரமைக்க வேண்டும் என்றார்.

தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துகளை மீட்பதுடன், கோயில் வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து வரும் நிலையில், தாராசுரம் கோயிலில் மீண்டும் சிலைகளை பிரதிஷ்டை செய்து, குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதுதான் பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பக்தர்களே பிரதிஷ்டை செய்த சிலை

இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஏறத்தாழ 400 ஆண்டுகள் மூலவர் சிலை இல்லாமல் இருந்தது. இதை மீண்டும் பிரதிஷ்டை செய்யவேண்டும் என பக்தர்கள் கோரிக்கைவிடுத்து வந்த நிலையில், அதற்குதொல்லியல் துறை அனுமதிக்கவில்லை. இதையடுத்து, 1981 மார்ச் 16-ம் தேதி, அப்போது வடஆற்காடு மாவட்ட ஆட்சியராக இருந்த கங்கப்பாவின் மறைமுக உதவியோடு சத்துவாச்சாரியில் இருந்த மூலவர் சிவலிங்கத்தை கொண்டு சென்று கோயில் கருவறையில் பக்தர்களே பிரதிஷ்டை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x