Published : 09 Mar 2016 10:38 AM
Last Updated : 09 Mar 2016 10:38 AM

கல்விக் கடனை கட்டவில்லை எனக்கூறி மாணவியின் குடும்பப் படத்துடன் பேனர்: வங்கிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

கல்விக் கடனை வசூலிக்க பொது இடத்தில் மாணவியின் போட்டோவுடன் ஃபிளெக்ஸ் வைத்து அவமானப்படுத்தியதற்காக ஏன் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கூடாது என கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்பந்தப்பட்ட வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனது மகளின் பொறியியல் படிப்புக்காக மஞ்சூரில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில் 2009-ல் ரூ.2 லட்சம் கல்விக் கடன் பெற்றிருக்கிறார். திருப்பிச் செலுத்துவதற்கான தவணைக் காலம் 2014 ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ஜூலை 2014-ல் ஒரு லட்சம் ரூபாயை மொத்தமாக செலுத்தி இருக்கிறார் கிருஷ்ணன்.

ஆனால், 2015 ஜனவரியில் கல்விக் கடனை திருப்பிச் செலுத்தச் சொல்லி அழுத்தம் கொடுத்திருக்கிறது வங்கி நிர்வாகம். திரும்பத் திரும்ப வங்கியில் இருந்து வந்த நெருக்கடிகளை தாங்க முடியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணன் 01.02.15-ல் உயிரிழந்தார்.

இந்நிலையில், இவர்கள் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என கிருஷ்ணன் அவரது மனைவி சரஸ்வதி மற்றும் அவரது மகள் ஆகியோரின் புகைப்படங்களோடு பொது இடத்திலும் கிளைக்கு அருகிலும் ஃபிளெக்ஸ் போர்டுகளை வைத்தது வங்கி நிர்வாகம்.

இதைப் பார்த்துவிட்டு, கிருஷ்ணனின் மகளுக்கு ஆதரவாக திரண்ட பொதுமக்கள் வங்கிக் கிளையை முற்றுகையிட்டு பிரச்சினையைக் கிளப்பவும் போலீஸ் தலையிட்டு ஃபிளெக்ஸ் போர்டுகளை அப்புறப்படுத்தியது. இது தொடர்பாக மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கும் கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கம் 06.07.15-ல் கடிதம் எழுதியது.

இதையே வழக்காக எடுத்துக் கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம், நீலகிரி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைவர், கிளை மேலாளர் ஆகியோருக்கு 06.08.15-ல் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து கிருஷ்ணனின் மகளிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்ட வங்கி கிளை நிர்வாகம், ‘டேட்டா என்ட்ரியில் நடந்த தவறால் அவரது பெயர் வராக்கடன் பட்டியலில் தவறுதலாக சேர்க்கப்பட்டுவிட்டது. இப்போது அந்த தவறு சரிசெய்யப்பட்டு, நீத்துவின் விருப்பப்படி தவணைக் காலமும் திருத்தி அமைக்கப்பட்டுவிட்டது’ என்று மனித உரிமைகள் ஆணையத்துக்கு பதில் கொடுத்தது.

இதை ஏற்க மறுத்த ஆணையம், ‘கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாவிட்டாலும் மாணவரின் போட்டோவை பிரசுரிக்கக் கூடாது என்ற மத்திய நிதியமைச்சகத்தின் உத்தரவை பின்பற்றவில்லை. இதன் மூலம், அரசியலமைப்பின் பிரிவு 21-ல் கூறப்பட்டுள்ள, நாட்டில் கவுரவமாக வாழும் உரிமையை பறித்து மாணவியை அவமானப்படுத்தி இருக்கிறீர்கள். இதற்காக நீத்துவுக்கு வங்கி நிர்வாகம் ரூ.ஒரு லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என ஏன் உத்தரவிடக் கூடாது?’ என விளக்கம் கேட்டு சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைவருக்கு கடந்த 2-ம் தேதி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இந்த விவகாரத்தை சுமூகமாக முடிக்க நடவடிக்கை எடுத்த வங்கிக் கிளையின் முன்னாள் துணை மேலாளர் ஸ்ரீதரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “முன்பு இருந்த மேலாளர், தவணை விடுப்புக்கான காலத்தை குறைத்து கணக்கிட்டுவிட்டதால் நடந்த தவறு இது. இதை எடுத்துச் சொல்லி கிருஷ்ணனின் மகளிடம் மன்னிப்பு கோரி புகாரை திரும்பப் பெற வைத்தோம். ஆனாலும், மனித உரிமை ஆணையம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது என்றால் வங்கி நிர்வாகம் தான் இனி முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x