Published : 22 Oct 2021 09:40 PM
Last Updated : 22 Oct 2021 09:40 PM

யூரியா, டிஏபி உரங்கள் தேவை: மத்திய ரசாயன அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்; டி.ஆர்.பாலு நேரில் வழங்கினார்

தமிழகத்தில் உருவாகியுள்ள அதிகரித்த தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு திட்டப்படி ஒட்டுமொத்த அளவிலான யூரியாவையும், கூடுதலாக 25,000 மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரங்களையும், 10,000 மெட்ரிக் டன் எம்.ஓ.பி. உரங்களையும் வழங்கிட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மத்திய ராசயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாடு நடப்பு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் பரவலாக மழையை பெற்றுள்ளதோடு, மேட்டூர் அணையும் திட்டமிடபடி ஜூன் 12ஆம் நாள் காவிரி டெல்டா பகுதி பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால், கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிக அதிகமாக குறுவை சாகுபடிக் காலத்தில் நெல் சாகுபடிக்கான பகுதி 4.9 இலட்சம் ஏக்கரையும் கடந்து விட்டது.

மேலும், மாநிலத்தில் முக்கிய அணைகள் அனைத்தும் பல ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டதால் 10 இலட்சம் ஏக்கருக்கும் மேலாக நெல் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டைவிட 2.72 இலட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. அதன்காரணமாக பயிர்கள் சாகுபடி செய்யப்படும் மொத்த நிலங்களின் பரப்பு 55.5 இலட்சம் ஏக்கரை தாண்டியுள்ளது.

தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதாலும், அக்டோபர் 26ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழையும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும், இந்த ஆண்டு சம்பா சாகுபடியும் பிரகாசமாக இருப்பதற்கான நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து உரங்களுக்கும், குறிப்பாக யூரியா உரத்துக்கான தேவை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

இந்த தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மத்திய அரசு 2021 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 4.911 இலட்சம் மெட்ரிக் டன் யூரியா வழங்க திட்டமிட்டுள்ளது. ஆனால் உர நிறுவனங்கள் இதுநாள்வரை 3.852 இலட்சம் மெட்ரிக் டன் யூரியாவை மட்டுமே வழங்கியுள்ளதால், 1.059 இலட்சம் மெட்ரிக் டன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று மேற்கண்ட காலக் கட்டத்தில் வழங்க வேண்டிய 1.47 இலட்சம் மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரங்களில் 1.15 இலட்சம் மெட்ரிக் டன் உரங்களையே உர நிறுவனங்கள் வழங்கியுள்ளதால், அதிலும் 32,000 மெட்ரிக் டன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்கள் குறைந்த அளவில் வழங்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் மாதத்திற்கான வழங்கல் திட்டத்திலும் தேவையான அளவைவிட குறைவான அளவில் யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுபற்றிய விவரம் கீழ்கண்டவாறு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு சம்பா சாகுபடி காலம் மிக முக்கியமானதாகும். இந்த ஆண்டு மாநில அரசு 125 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்து உணவு தானியங்களை விளைவிக்கவும், சாகுபடி நிலங்களின் அளவை அதிகரிக்கவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்களின் வழங்கலில் ஏற்படக்கூடிய பற்றாக்குறை தானிய விளைச்சலைக் கடுமையாகப் பாதிப்பதோடு, விவசாயிகளின் வருவாயையும் பாதிக்கும்.

எனவே, உரிய அலுவலர்களுக்கு பொருத்தமான உத்தரவுகளை பிறப்பித்து திட்டப்படி ஒட்டுமொத்த அளவிலான யூரியாவையும், கூடுதலாக 25,000 மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரங்களையும், 10,000 மெட்ரிக் டன் எம்.ஓ.பி. உரங்களையும். உருவாகியுள்ள அதிகரித்த தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

இக்கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர். பாலு மத்திய ராசயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சரிடம் நேரில் வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x