Published : 22 Oct 2021 05:55 PM
Last Updated : 22 Oct 2021 05:55 PM
அனைத்து ரயில்களிலும் முதியோர், பத்திரிகையாளர் உள்ளிட்ட 53 சலுகைகளை திரும்ப வழங்க சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தி இருந்த நிலையில் விரைவில் முடிவெடுப்பதாக ரயில்வே அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
முன்னதாக இது தொடர்பாக மதுரை எம்.பி. வழங்கிய மனுவில், கரோனா பிரச்சினையால் நிறுத்தப்பட்ட வண்டிகள் மீண்டும் ஓடத்துவங்கின. அப்போது ஏற்கனவே வழங்கப்பட்ட 53 சலுகைகளை ரயில்வே பறித்துவிட்டது.
முதியோர், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், பத்திரிகையாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் என்று பல்வேறு பிரிவினருக்கும் வழங்கப்பட்ட சலுகைகள் சிறப்பு வண்டிகளில் நிறுத்தப்பட்டன.
21.5 கோடி பயணிகள் இந்த பலனை அனுபவித்தனர் என்று தலைமை கணக்கு அதிகாரி அறிக்கை கூறுகிறது. இது மொத்த முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களில் பதினொன்றரை சதமானம் ஆகும்.
இதில் 37.5 சதம் ரயில்வே ஊழியர்கள் ஆகும். அவர்களுக்கு வழங்குவது சட்டப்படியான சலுகையாகும். 52.5 சதமானம் பேர் முதியோர் சலுகை பெறுபவர்கள். நோயாளிகள் 3.8 சதமானமாகும். மாற்றுத்திறனாளிகள் 3.6 சதமானம் ஆகும். இதர சலுகைகள் 2.9 சதமானம்.
முன்பதிவு செய்து பயணம் செய்வோரால் வரும் வருமானத்தில் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகளை கழித்தால் மற்றவர்களுக்கு இந்த சலுகைகளால் ஐந்து சதமான வருமானம்தான் ரயில்வேக்கு வராமல் போகிறது.
நமது நாட்டில் 20 சதமானம் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள். மேலும் சரிபாதி மக்களின் வருமானமும் சொல்லத்தக்கதாக இல்லை.
இந்த நிலையில் பல சமூக காரணங்களுக்காகவும் சமூககடமையாகவும் வழங்கப்பட்ட இந்த சலுகைகளை மீண்டும் திரும்ப கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
அந்த மனுவை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் அவர்களை நேரில் சந்தித்து மதுரை எம் பி சு .வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்தார்.
இது குறித்து எம்.பி. கூறுகையில், "டிசம்பர் 2020 முதல் இந்த முதியோர் சலுகை உள்ளிட்ட சலுகைகள் திரும்பப் பெறப்பட்டன. இதனால் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பயணம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பயணச் சலுகைகளை திரும்ப வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டேன்.
அத்துடன் மாணவர்களுக்கான இலவச சீசன் டிக்கெட் உள்ளிட்ட சலுகை சீசன் டிக்கெட்டுகளை வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு கோரினேன்.
கிராம வியாபாரிகளுக்கு வசதியாக மார்க்கெட் வென்டார் சீசன் டிக்கெட்டுகளையும் திரும்ப வழங்க கோரிக்கை விடுத்தேன்.
இதற்கு வசதியாக சாதாரண பயணி வண்டிகளை மீண்டும் இயக்கவும் விரைவு வண்டிகளில் பொது பெட்டிகளை இணைக்கவும் மீண்டும் வலியுறுத்தினேன்.
“முதியோர்களுக்கான பயணச்சலுகை உள்ளிட்ட பிரச்சனையில் ஆய்வு செய்து விரைவில் முடிவெடுப்பதாக” அமைச்சர் தெரிவித்தார்.
அதே போன்று ரயில்வே துறையின் புதிய அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் பதவியேற்ற பின் இரயில்வே ஆலோசனைக் குழுக்கூட்டம் கூட்டப்படாமல் இருக்கிறது என்பதை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசென்றேன்.
கோரிக்கையை ஏற்று கூடிய விரைவில் ஆலோசனைக் குழுவை கூட்டுவதாகவும் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT