Published : 22 Oct 2021 04:29 PM
Last Updated : 22 Oct 2021 04:29 PM

மின்வாரியம் மீதான புகாருக்கு மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது: அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

திருப்பூர்

மின்வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. வழக்குத் தொடர்ந்தால் சந்தித்துக் கொள்கிறேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் கட்டப்பட்டு வரும், பாஜகவின் மாவட்டக் கட்சி அலுவலகத்தை தேசியச் செயலாளர் அருண்சிங், மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசியச் செயற்குழு உறுப்பினர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் இன்று ஆய்வு செய்தனர்.

பின் செய்தியாளர்களிடம் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:

''தமிழகம் முழுவதும் பாஜக கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கட்சிக்கென சொந்த அலுவலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்ட அலுவலகத்தை வரும் நவ.10-ம் தேதி, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா திருப்பூருக்கு வருகை தந்து, திறந்துவைக்க உள்ளார்.

மேலும் இங்கிருந்தவாறே ஈரோடு, திருநெல்வேலி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்பட்ட கட்சி அலுவலகங்களைக் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்துவைக்க இருக்கிறார். மின்சார வாரியம் தொடர்பான புகாருக்கு, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சொல்லியது போல் மன்னிப்பு எல்லாம் என்னால் கேட்க முடியாது. வழக்குத் தொடர்ந்தால் அதனை நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்கின்றேன்''.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

முன்னதாக, புதிய கட்டிட அலுவலக வளாகத்தில், 10-ம் தேதி நடைபெறும் காணொலிக் காட்சி நிகழ்வுகள் தொடர்பாகக் கட்சியினர் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் தேசியச் செயலாளர் அருண்சிங், மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஆலோசித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x