Published : 22 Oct 2021 03:38 PM
Last Updated : 22 Oct 2021 03:38 PM

இந்து சமய அறநிலையத் துறை நிதியின் கீழ் இயங்கும் கல்லூரி பணியிடங்களுக்கு இந்து மதத்தினரை மட்டுமே நியமிக்க முடியும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

இந்து சமய அறநிலையத் துறை நிதியின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்து மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் சென்னை கொளத்தூரில் இயங்கும் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், காவலர், தூய்மைப்பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு
விண்ணப்பங்களை வரவேற்று இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சார்பில் அக்டோபர் 13 ஆம் தேதி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டது.

சம்பந்தப்பட்ட பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், மற்ற மதத்தினர் யாரும் கலந்து கொள்ள தகுதி இல்லை என்ற அறிவிப்பை எதிர்த்து, சென்னையை சேர்ந்த முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சுஹைல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தன் மனுவில், தாய் மொழியை தமிழாக கொண்ட தனக்கு தமிழக அரசின் பணிகளில் நியமனம் செய்ய மதம் தடையாக இருக்கக் கூடாது என்றும், இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 16 மற்றும் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமெனவும், அதனை ரத்து செய்து விட்டு எல்லா மதத்தினரும் விண்ணப்பிக்கும் வகையில், புதிதாக அறிவிப்பு வெளியிட இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு இன்று (அக். 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோரும், அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரமும் ஆஜராகினர்.

தமிழக அரசு தரப்பில், நியமன நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ், இந்து சமய அறநிலையத்துறை நிதி மூலம் நடத்தப்படக்கூடிய நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று விதி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கு குறித்து தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x