Published : 22 Oct 2021 08:59 AM
Last Updated : 22 Oct 2021 08:59 AM
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர், நண்பர் உள்ளிட்டோரின் வீடுகள் உள்ளிட்ட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ரெய்டு நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏ சி.விஜயாஸ்கர். இவர், கடந்த அதிமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தார்.
இந்நிலையில், இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அமைச்சரின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி ரெய்டு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 43 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், இன்று (அக்.22) முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் வீடு, நண்பர் சந்திரசேகரின் ரியல் எஸ்டேட் நிறுவனம், மற்றொரு உதவியாளர் முருகனின் வீடு உள்பட 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த இடங்களில் கடந்த 18-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சீல் வைத்துச் சென்றது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை பெற்று பூட்டை உடைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் உள்ள மருத்துவர் செல்வராஜ் என்பவரின் மருத்துவமனையிலும் சோதனை நடைபெறுகிறது. விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனின் சென்னை நந்தனம் வீட்டிலும், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சந்திரசேகர் என்பவரின் சாஸன் டெவலப்பர்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகளில் ரெய்டு நடந்த நிலையில் தற்போது விஜயபாஸ்கரின் உதவியாளர், நண்பர் வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது.
சி. விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT