Published : 22 Oct 2021 03:06 AM
Last Updated : 22 Oct 2021 03:06 AM
கிருஷ்ணகிரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் குழந்தைத் திருமணம் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். சமூக நலன், மகளிர் உரிமைத் துறை இயக்குநர் ரத்னா வரவேற்றார். இயக்குநர் வளர்மதி தொடக்க உரையாற்றினார். அரசின் முதன்மை செயலர் ஷம்பு கல்லோலிகர் திட்ட விளக்க வுரையாற்றினார். எம்எல்ஏக்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), மதியழகன் (பர்கூர்), எம்பி செல்லக்குமார் (கிருஷ்ணகிரி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழகத்தைப் பொறுத்தவரை தேனி, கரூர், தருமபுரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குழந்தைத் திருமணம், கர்ப்பம் தரிப்பது அதிகரித்து உள்ளது. இம்மாவட்டத்தில் 2015-ம் ஆண்டு 246 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. 2020-ம் ஆண்டு 830 ஆக அதிகரித் தது. கடந்த 10 மாத காலத்தில் மட்டும் 728 என உயர்ந்து இருக்கிறது. இதுகுறித்தான எந்த விசயத்தையும் கடந்த ஆட்சியில் கவனத்தில் கொள்ளாமலே அலட்சியமாக விட்டுவிட்டார்கள்.
பெற்றோர் தான் காரணம்
இளம் வயதில் பெண்கள் திருமணம் செய்வதற்கு பெற்றோர் தான் முக்கிய காரணம். இளம் வயது திருமணத்தால், சிறுமிகளின் உடல் நலம் பாதிக்கப்படும். குழந்தைகளும் குறைபாடுகளுடன் பிறக்கும். இளம்வயது திருமணங்கள் வழக்குப்பதிவு செய்வதால் மட்டுமே நின்றுவிடாது. கிராமங்களில் உள்ள மக்களிடம் கலைநிகழ்ச்சிகள், நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
கோவையில் ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்வதாக புகார் வந்தது. அங்கு அலுவலர்கள் ஆய்வு செய்து அக்கடைக்கு சீல் வைத்து உள்ளனர். இதுபோன்ற சீரழிவுகளை கண்டும், காணாமல் போகும் அரசு அல்ல திமுக அரசு. யார் தவறு செய்தாலும், அதைக் கண்டித்து நடவடிக்கை எடுக்கும் அரசாக இந்த அரசு இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.
சட்டம் தன் கடமையை செய்யும்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:
குழந்தைக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். 1098, 1091, 181 ஆகிய எண்களில் குழந்தைத் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார் செய்யலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் திருமணம் போன்ற எதுவும் நடைபெறாமல் உள்ள மாநிலமாக தமிழகம் உருவாவதற்கு இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். சட்டம் தன் கடமையை செய்யும். சட்டத்தை மீறுபவர்களை இந்த அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கும். எனவே, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT