

செண்பகராமன்புதூர் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த நெல்லை வெளியே திறந்தவெளி தளத்தில் 5 நாட்களாக குவித்து வைத்ததால் 2500 மூட்டை நெல்கள் மழையில் நனைத்து முளைத்துள்ளது.
இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் இன்று மாலை ஆளும்கட்சி பஞ்சாயத்து தலைவர் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் அறுவடை பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அரசு நேரடி நெல் கொள்முல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்களில் சமீபத்தில் பெய்த கனமழைக்கு மத்தியில் சிரமத்துடன் விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்து கரைசேர்த்தனர்.
இவற்றில் 2500 மூட்டைக்கு மேற்பட்ட நெல்களை செண்பகராமன்புதூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது அவை 17 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் உள்ளதாக தெரிவித்த நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் அங்குள்ள திறந்தவெளி வளாகத்தில் நெல்லை குவித்து வைக்குமாறு கூறினர்.
விவசாயிகளும் நெல்லை குவித்து வைத்து தார்பாலினால் மூடினர். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் மீண்டும் கடந்த இரு நாட்களாக மழை பெய்தது.
இதில் நெல் கொள்முதல் நிலையத்தின் வெளியே குவித்து வைத்திருந்த நெல்கள் தண்ணீரில் நனைந்ததுடன், தளத்தில் தண்ணீர் கட்டி நெற்குவியலில் புகுந்து முளைத்து வருகிறது.
இதைப்பார்த்து கவலையும், ஆவேசமும் அடைந்த விவசாயிகள் இன்று மாலை செண்பகராமன்புதூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு திறந்த வெளியில் குவித்து வைத்திருந்த நெல் குவியல் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக ஆளும் திமுகவை சேர்ந்த செண்பகராமன்புதூர் பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம் கோஷமிட்டவாறு போராட்டம் நடத்தினார்.
அவருடன் நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அதை ஏற்கமறுத்து விவசாயிகளின் இழப்பிற்கு கொள்முதல் நிலைய அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என குற்றஞ் சாட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்ற செண்பகராமன்புதூர் பகுதி விவசாய சங்க தலைவர் ராக்கிசமுத்து கூறுகையில்; மழை நேரத்தில் சிரமப்பட்டு நெல் கொள்ளுதல் நிலையத்திற்கு கொண்டு வந்தால், நெல் மூட்டைகளை கட்டிடத்தின் உள்ளே வைக்காமல் வெளியே தளத்தில் போட்டு விட்டனர்.
தார்பாலினால் மூடினாலும் தற்போது பெய்த மழையில் நெல்மணிகள் முளைக்க ஆரம்பத்துள்ளது. 41 கிலோ எடை வீதம் சுமார் 2500 மூட்டை நெல்கள் வீணாகியுள்ளன. இதனால் செண்பகராமன்புதூர் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.