Published : 21 Oct 2021 02:56 PM
Last Updated : 21 Oct 2021 02:56 PM
துரை வைகோவுக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டுள்ள சூழலில், மதிமுகவில் இருந்து மாநில இளைஞரணி செயலாளர் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மதிமுகவின் மாவட்டச் செயலர்கள், உயர்நிலை, ஆட்சிமன்றம், அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிலையச் செயலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று (அக். 20) சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், மதிமுக தலைமை நிலைய செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டார். வாரிசு அரசியலை எதிர்த்து, தான் சார்ந்து இருந்த திமுகவில் இருந்து விலகி நிர்வாகிகள், தொண்டர்களுடன் இணைந்து மதிமுகவை தொடங்கிய வைகோ, தற்போது வாரிசு அரசியலை ஏற்றுக் கொள்ளும் வகையில், அவரது மகன் துரை வைகோவுக்கு கட்சி பதவியை வழங்கியுள்ளார் என குற்றச்சாட்டு குரல்கள் எழுந்துள்ளன.
அதேசமயம், "வாரிசு அரசியல் என்பது ஒருவரை கொண்டு போய் திணிப்பது. ஆனால், துரை வைகோவுக்கு தொண்டர்களின் விருப்பப்படியே வாக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரகசிய வாக்கெடுப்பில் 106 பேர் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனவே, அவருக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டுள்ளது" என, வைகோ தரப்பில் விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன.
வைகோ தனது மகனுக்கு கட்சிப் பதவியை வழங்கியதை, பொறுப்பில் உள்ள நிர்வாகிகளில் பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டாலும், அடிமட்டத்தில் உள்ள கட்சி தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா?, இவ்விவகாரம் தொடர்பாக அவர்களது செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பது பின்னரே தெரியவரும். இதற்கிடையே, துரை வைகோவுக்கு கட்சிப் பதவி வழங்கியதற்கு முதல் முதலாக மாநில நிர்வாகியிடம் இருந்தே எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது.
கோவையைச் சேர்ந்தவர் வே.ஈஸ்வரன். இவர், மதிமுக மாநில இளைஞரணி செயலராக உள்ளார். அரசியல் கட்சி போராட்டங்களைத் தவிர, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், சுற்றுச்சூழலுக்கு ஆதரவாகவும், சமூகநலனுக்கு ஆதரவாகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.
மதிமுக மட்டுமின்றி, பல்வேறு கட்சியிலும் அவருக்கு நன்கு அறிமுகம் உள்ளது. தொண்டர்களிடமும் நன்கு அறிமுகம் உள்ளவர் வே.ஈஸ்வரன். மதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் வே.ஈஸ்வரன் கலந்து கொள்ளாத சூழலில், துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டதையும், அடுத்த அரசியல் தலைவர் என்று சுட்டிக் காட்டப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, மதிமுகவில் இருந்த விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
முழு அர்ப்பணிப்புடன்...
இது தொடர்பாக, வே.ஈஸ்வரன் 'இந்து தமிழ் திசை'யிடம் இன்று (அக். 21) கூறியதாவது:
"நான் கடந்த 28 ஆண்டுகளாக, எனது வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்து மதிமுகவில் உண்மையாக பணியாற்றி வந்தேன். கட்சி இட்ட கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றி வந்துள்ளேன். மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க அறப் போராட்டங்கள் மூலமாகவும், சட்டப் போராட்டங்கள் மூலமாகவும் தொடர்ந்து போராடி வந்தேன்.
மதிமுகவில் பொறியாளர் அணி அமைப்பாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர், மாநில இளைஞர் அணி செயலாளர் என, படிப்படியாக உழைத்து பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளேன். பெருந்துறை இடைத்தேர்தல் முதல் கடைசியாக நடந்த பல்லடம் சட்டப்பேரவைத் தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் சிறப்பாக பணியாற்றியுள்ளேன்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க நான் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு எதிராக போராடியதன் விளைவாக, கோவையில் 10 ஆயிரம் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. சட்டப் போராட்டம் மூலம் வெள்ளலூர் குப்பைக்கிடங்கு திடக்கழிவு மேலாண்மைப் பணிக்காக ரூ.200 கோடி அளவுக்கு அரசு நிர்வாகம் நிதி ஒதுக்கப் பாடுபட்டுள்ளேன்.
மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக்காகவும், கோவையின் நதிநீர் திட்ட மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். என் பொது வாழ்வில் கிடைத்த அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி, கடுகளவு கூட நான் பலன் அடைந்ததில்லை. அரசியலை எனது சுய லாபத்துக்காக பயன்படுத்தக் கூடாது என்பது என் முக்கிய கொள்கை.
மதிமுகவில் துரை வைகோவுக்கு கட்சி பொறுப்பு வழங்கப்பட்டது. இது எனது கருத்துகளுக்கு எதிரானது. இந்த கருத்து வேறுபாட்டுடன் கட்சியில் பயணிப்பது எனக்கும் நல்லதல்ல. கட்சிக்கும் நல்லதல்ல. கட்சியில் யாருக்கு வேண்டுமானாலும் பொறுப்பு வழங்கலாம். ஆனால், அவர் தான் அடுத்து கட்சியை வழிநடத்துபவர் என அறிவிப்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?
மேலும், தனக்குத் தெரியாமல் கட்சியில் சில நிகழ்வுகள் நடப்பதாக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். எனவே, இதுபோன்ற இடர்பாடான காரணங்களால் மதிமுகவில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளேன். அதேசமயம், எனது சட்டப் போராட்டங்களையும், மக்கள் பணிகளையும் தொடர ஒரு இயக்கம் தேவைப்படுகிறது. எனவே, 'மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்' என்ற இயக்கத்தைத் தொடங்க உள்ளேன்".
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT