Published : 21 Oct 2021 02:06 PM
Last Updated : 21 Oct 2021 02:06 PM
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக். 21-ம் தேதி, உலக அயோடின் குறைபாடு கோளாறுகள் தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதையொட்டி, காரைக்கால் மாவட்ட நலவழித்துறையின் ஊட்டச்சத்துப் பிரிவு சார்பில், நெடுங்காடு மேம்படுத்தபட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், இன்று(அக்.21) உலக அயோடின் குறைபாடு கோளாறுகள் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி(பொ) சுந்தர பாண்டியன் தலைமை வகித்துப் பேசியது: அயோடின் சத்துக்கள் நிறைந்த முட்டை, இறைச்சி, கீரை, மீன், பால், வாழைப்பழம் மற்றும் அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்துவதால் அயோடின் குறைபாட்டிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார்.
இந்நிகழ்வில் பங்கேற்ற மருத்துவர் பால அரவிந்தன் பேசியது: அயோடின் சத்து மனித உடல் ஆரோக்கியத்துக்கும், மூளை வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமானது. அயோடின் சத்துக் குறைவினால் முன் கழுத்து வீக்கம், உடல் சோர்வு, மந்தநிலை போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு அயோடின் சத்துக் குறைவு ஏற்படுவதால் கருச்சிதைவு, குறைப்பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும், பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிப்பு மற்றும் பிறவி ஊனங்கள் ஏற்படலாம். அயோடின் குறைபாட்டால் ஹைபோ தைராய்டு ஏற்படுகிறது, காரணமின்றி எடை அதிகரித்தல், மனச்சோர்வு, முடி உதிர்தல், வறண்ட சருமம், கருத்தரிப்பதில் பிரச்சனை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்றார்.
சுகாதார மேற்பார்வையாளர் எழிலரசி பேசியது: சமையலுக்கு அயோடின் கலந்த உப்பை உபயோகிப்பதன் மூலம், உடலுக்குத் தேவையான அயோடின் சத்து கிடைக்கப்பெறுகிறது. தேவைக்கு அதிகமாக உடலில் சேரும் அயோடின் சத்து எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. அது சிறுநீர் மூலம் வெளியேறுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அயோடின் கலக்காத உப்பை விற்க தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக சுகாதார உதவி ஆய்வாளர் ஜெகநாதன் வரவேற்றார். ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர்கள், ஆஷா ஊழியர்கள் செய்திருந்தனர். பாலூட்டும் தாய்மார்கள், பொதுமக்கள், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT