Published : 21 Oct 2021 03:06 AM
Last Updated : 21 Oct 2021 03:06 AM

திருச்செந்தூரில் பணியில் ஈடுபட்டிருந்தபோது போக்குவரத்து காவலர் மீது அமைச்சர் உதவியாளர் தாக்குதல்: உயர் அதிகாரிகள் தலையீட்டால் புகார் வாபஸ்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் போக்குவரத்து காவலரை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் தாக்கியதாக எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் கோயில் வாசல் சரவண பொய்கை பகுதியில் கடந்த 18-ம் தேதி போக்குவரத்து பிரிவு தலைமைக் காவலர் என்.முத்துக்குமார் (42) போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் முன்பு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபாகரன் வந்த அரசு கார், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்தது.

போக்குவரத்து காவலர் முத்துக்குமார், அந்த காரின் ஓட்டுநர் குமாரிடம் காரை எடுக்குமாறு கூறியுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்த அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன், போக்குவரத்துகாவலர் முத்துக்குமாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் போக்குவரத்து காவலர் முத்துக்குமாரின் கன்னத்தில் கிருபாகரன் அறைந்ததாக தெரிகிறது.

காவலர் முத்துக்குமார் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். மேலும், அமைச்சரின் உதவியாளர் தன்னை தாக்கியதாக திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் காவல் துறை உயர் அதிகாரிகள் கவனத்துக்கு சென்றது.

உயரதிகாரிகள் உத்தரவின்பேரில் காவலர் முத்துக்குமார் மற்றும் அமைச்சர் உதவியாளர் கிருபாகரன் ஆகிய இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். காவலர் முத்துக்குமார் மற்றும் கிருபாகரன் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மாலை திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு, ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிகிறது.

அப்போது, அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன் நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்ததுள்ளார். முத்துக்குமார் முதலில் புகாரை வாபஸ் பெற மறுத்துள்ளார். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு முத்துக்குமார் தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார். இதனால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்த போதிலும், பொது இடத்தில் மக்கள் மத்தியில் காவலரை அமைச்சரின் உதவியாளர் தாக்கிய விவகாரம் பெரும் சரச்சையை கிளப்பியுள்ளது. இந்த சம்பவத்துக்கு, முன்னாள் முதல்வர் பழனிசாமி உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x