Published : 20 Oct 2021 08:56 PM
Last Updated : 20 Oct 2021 08:56 PM
சசிகலா மீது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போலீஸில் புகார் அளித்துள்ளார். சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் அவர் புகார் மனுவை அளித்துள்ளார்.
மாம்பலம் காவல் நிலையம் காவல் ஆய்வாளரிடம் கொடுக்கப்பட்ட அந்தப் புகாரில் இருப்பதாவது:
அதிமுகவின் அமைப்புச் செயலாளராக நான் (டி.ஜெயக்குமார்) தங்களின் கவனத்துக்கு நடராஜன் மனைவி வி.கே.சசிகலாவின் நடவடிக்கைகள் குறித்து கொண்டு வருகிறேன்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் நடந்த பல்வேறு குழப்பங்களால் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமைப் போர் ஏற்பட்டது. அதில் இரட்டை இலை சின்னம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கே சொந்தம் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
அதன் பின்னரும் கூட இவ்விவகாரம் தொடர்பாக வி.கே.சசிகலா டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என அடுத்தடுத்து மனு கொடுத்துப் பார்த்தார்.
ஆனால், அவை எடுபடவில்லை. உச்ச நீதிமன்றம் சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்தது. சீராய்வு மனுவும் தள்ளுபடியானது.
எல்லா பக்கமும் தோல்வியைத் தழுவியதால் இப்போது குழப்பத்தை விளைவித்து தன்னைத் தானே அதிமுக பொதுச் செயலாளர் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டு வருகிறார்.
அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனாலும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எனக் கூறி குழப்பம் விளைவிக்கிறார். அவர் மீது ஐபிசி 419 கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து
எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியையும் ஏற்றினார். அங்கு நினைவு கல்வெட்டை திறந்துவைத்தார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா என்று பொறிக்கப்பட்டிருக்கிறது.இது முற்றிலும் சட்டவிரோதமானது.
இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்தப் புகாரில் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT